ஊட்டி படகு இல்லத்துக்கு புதிதாக 50 படகுகள்
சுற்றுலா பயணிகளை கவருவதற்காக ஊட்டி படகு இல்லத்துக்கு 50 படகுகள் புதிதாக வந்து உள்ளன.
ஊட்டி
சுற்றுலா பயணிகளை கவருவதற்காக ஊட்டி படகு இல்லத்துக்கு 50 படகுகள் புதிதாக வந்து உள்ளன.
ஊட்டி படகு இல்லம்
நீலகிரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த ஏப்ரல் 20-ந் தேதி முதல் அனைத்து சுற்றுலா தலங்களும் மூடப்பட்டன. ஊரடங்கு தளர்வில் சுற்றுலா தலங்கள் திறக்க அனுமதி இல்லை. இருப்பினும் சுற்றுலா பயணிகள் வர தடை இல்லாததால், வெளியிடங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வந்து செல்கின்றனர்.
ஊட்டி படகு இல்லத்தில் சுற்றுலா பயணிகளுக்காக 126 மிதி படகுகள், 17 துடுப்பு படகுகள், 40 மோட்டார் படகுகள் என மொத்தம் 183 படகுகள் இயக்கப்பட்டு வருகிறது.
மேலும் சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்க மாடங்கள், புகைப்படம் எடுக்க செல்பி ஸ்பாட் அமைக்கப்பட்டு உள்ளது. ஆனால் கொரோனா பாதிப்பு காரணமாக ஊட்டி படகு இல்லம் மூடப்பட்டு உள்ளதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
பராமரிப்பு பணிகள்
கடந்த ஆண்டை போல் நடப்பாண்டிலும் கோடை சீசனில் சுற்றுலா தலங்கள் மூடப்பட்டதால், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்துக்கு ரூ.6 கோடி வரை வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டு படகு இல்லம் திறப்பதற்கான பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் சுற்றுலா பயணிகளை கவருவதற்காக ஊட்டி படகு இல்லத்துக்கு கூடுதல் படகுகள் வந்துள்ளன.
இதுகுறித்து படகு இல்ல மேலாளர் சாம்சன் கூறியதாவது:-
50 படகுகள்
சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் புதிதாக மோட்டார் படகுகள் 7 உள்பட மொத்தம் 50 படகுகள் வந்து உள்ளன. தற்போது 5 மோட்டார் படகுகளை பொருத்தும் பணி மும்முரம் நடந்து வருகிறது.
மோட்டார் படகுகள் மேல் பகுதியில் நிழற்குடை இருக்கும். ஆனால் புதிய 5 மோட்டார் படகுகளில் மேல்பகுதி பக்கவாட்டில் மூடப்பட்டு, கண்ணாடிகள் பொருத்தப்படுகிறது. இதன்மூலம் மழையிலும் இயக்க முடியும். 8 இருக்கைகள் கொண்ட 5 மோட்டார் படகுகள் சோதனை ஓட்டம் நடத்தி பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.
மேலும் 30 உயிர் பாதுகாப்பு வளையங்கள் வரவழைக்கப்பட்டு உள்ளது. தற்போது படகுகளில் தேங்கி கிடக்கும் தண்ணீரை அகற்றி பராமரிப்பு பணி நடந்து வருகிறது என்றார்.