பிரதிநிதிகளுடனான கலந்தாலோசனை கூட்டம்
தொழில்நிறுவனங்களின் பிரதிநிதிகளுடனான கலந்தாலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.
கரூர்
கரூர் மாவட்ட அளவில் உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கையினை அதிகரித்தல், அதிக அளவிலான வேலைவாய்ப்பினை உருவாக்கி தருதல், மாணவர்களின் கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமை பெற நடவடிக்கை எடுத்தல் உள்ளிட்ட கருத்துக்களை உள்ளடக்கி கரூர் மாவட்டத்தில் உயர்கல்வி நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் தொழில்நிறுவனங்களின் பிரதிநிதிகளுடனான கலந்தாலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் தலைமை தாங்கி கூறுகையில், தமிழ்நாட்டிலேயே தொழில் துறையில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த மாவட்டமாக நமது கரூர் மாவட்டம் திகழ்கின்றது. ஆயத்த ஆடை உற்பத்தியிலும், வீட்டு உபயோக ஜவுளி உற்பத்தியிலும், பேருந்து கட்டுமானத்திலும், கொசுவலை உற்பத்தியிலும் என பல்வேறு தொழில்களின் நகரமாக கரூர் விளங்கி வருகின்றது. சமீபத்தில் கரூர் மாவட்டத்தில் மாவட்ட தொழில் மையத்தின் உதவியுடன் அரசின் மானியம் பெற்று தொழில்முனைவோராக சாதித்து வருவோரின் தொழிற்சாலைகளை பார்வையிட்டேன். நல்ல பதவியுடன், நல்ல சம்பளத்துடன் நமது மாவட்டத்திற்குள்ளேயே பல வேலை வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கும்போது, இளைஞர்கள் வேலை தேடி அலையாமல் கரூர் மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலைகளில் எந்த வகையான தொழில்நுட்பம் தேவைப்படுகின்றது, அதற்கான படிப்புகளை படிக்க வேண்டும் என்பது குறித்து மாணவர்களிடத்திலும், இளைஞர்களிடத்திலும் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், உயர்கல்வி நிறுவனங்களில் அதற்கான பாடப்பிரிவுகளை உருவாக்கவும் வேண்டும் என்ற நோக்கத்திலே இந்த கூட்டம் நடைபெறுகின்றது. அடுத்தக் கூட்டத்தில் இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கான திட்ட வரைவு தயாரிக்கும் வகையில் உங்கள் கருத்துக்கள் இருக்க வேண்டும், என்றார்.