ஆள்மாறாட்டத்தில் தொழிலாளியை கொன்ற வாலிபர் கைது
செஞ்சி அருகே ஆள்மாறாட்டத்தில் தொழிலாளியை கொன்ற வாலிபர் கைது செய்யப்பட்டாா்.
செஞ்சி,
செஞ்சி அருகே உள்ள துத்திப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன்(வயது 48). இவரது மகன் வாசுதேவன். இவரும், அதே ஊரை சேர்ந்த சுந்தரமூர்த்தி மகன் சுகுமார்(27) என்பவரும் நண்பர்கள். செல்போன் பிரச்சினையால் இரு குடும்பத்தினருக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டது. இதனால் சுகுமார், கண்ணனை கொலை செய்ய திட்டமிட்டார். கடந்த 15-ந் தேதி இரவு வழக்கமாக கண்ணன் துாங்கும் இடத்தில் அதே ஊரை சேர்ந்த தொழிலாளி ஆறுமுகம்(65) துாங்கிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சுகுமார், தூங்குவது கண்ணன் என நினைத்து ஆறுமுகத்தின் தலையில் தடியால் அடித்துக் கொலை செய்து விட்டு தப்பி ஓடிவிட்டார். இது தொடர்பாக அனந்தபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுகுமாரை தேடி வந்தனர். இந்தநிலையில் வெளியூர் செல்வதற்காக நேற்று பொன்னங்குப்பம் பஸ் நிறுத்தத்தில் நின்றிருந்த சுகுமாரை போலீசார் கைது செய்தனர்.