காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை: ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.

Update: 2021-07-17 16:59 GMT
பென்னாகரம்:
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.
கனமழை
கர்நாடகா, கேரள மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான வயநாடு, குடகு உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. 
இதனால் கபினி அணையில் இருந்து வினாடிக்கு 18 ஆயிரம் கனஅடி தண்ணீரும், கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து வினாடிக்கு 2,426 கனஅடி தண்ணீரும் என மொத்தம் 20 ஆயிரத்து 426 கனஅடி தண்ணீர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழகத்திற்கு காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் நேற்று முன்தினம் தமிழக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லை வந்தடைந்தது.
நீர்வரத்து அதிகரிப்பு
இந்தநிலையில் நேற்று முன்தினம் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இந்த நீர்வரத்து படிப்படியாக அதிகரிக்க தொடங்கியது. அதன்படி நேற்று மதியம் 12 மணி நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் முழுவதும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை ஒகேனக்கல்லை வந்தடையும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்