ஊரடங்கு கட்டுப்பாடு: ஆடி பிறப்பையொட்டி வெறிச்சோடிய ஒகேனக்கல்
ஊரடங்கு கட்டுப்பாடு காரணமாக ஆடி மாத பிறப்பையொட்டி ஒகேனக்கல் சுற்றுலா தலம் வெறிச்சோடி காணப்பட்டது.
பென்னாகரம்:
ஊரடங்கு கட்டுப்பாடு காரணமாக ஆடி மாத பிறப்பையொட்டி ஒகேனக்கல் சுற்றுலா தலம் வெறிச்சோடி காணப்பட்டது.
ஆடி மாத பிறப்பு
தமிழகத்தில் காவிரி நுழையும் மாவட்டமான தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் பிறப்பையொட்டி காவிரி ஆற்றங்கரையில் புதுமண தம்பதிகள் மற்றும் பொதுமக்கள் புனித நீராடுவார்கள். பின்னர் அவர்கள் அங்குள்ள காவிரி அம்மன் மற்றும் தேசநாதேஸ்வரர் கோவில்களில் தாலிக்கயிற்றை மாற்றி வழிபடுவது வழக்கம்.
இந்த ஆண்டு ஊரடங்கு கட்டுப்பாடு காரணமாக ஆடி மாத பிறப்பையொட்டி ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் வர மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது. இதனால் காவிரி கரையோர பகுதிகள் பொதுமக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. ஒகேனக்கல்லில் உள்ள சாலைகள் ஆட்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடியது.
தீவிர கண்காணிப்பு
மேலும் ஒகேனக்கல் சுற்றுலா தலத்தின் அனைத்து பகுதிகளிலும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். குறிப்பாக அஞ்செட்டி சாலை, மடம் சோதனைச்சாவடி ஆகிய இடங்களில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். மேலும் வெளியாட்கள் ஒகேனக்கல்லுக்கு வருவதை தடுக்கும் வகையில் பென்னாகரத்தில் இருந்து ஒகேனக்கல்லுக்கு பொது போக்குவரத்தும் நேற்று நிறுத்தப்பட்டது.