திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட மகாலட்சுமி நகரில் ரூ.3 கோடியே 25 லட்சம் மதிப்புள்ள நிலத்தை மாநகராட்சி ஆணையாளர் மீட்டு நடவடிக்கை மேற்கொண்டார்.

திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட மகாலட்சுமி நகரில் ரூ.3 கோடியே 25 லட்சம் மதிப்புள்ள நிலத்தை மாநகராட்சி ஆணையாளர் மீட்டு நடவடிக்கை மேற்கொண்டார்.

Update: 2021-07-17 16:56 GMT
திருப்பூர், :
திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட மகாலட்சுமி நகரில் ரூ.3 கோடியே 25 லட்சம் மதிப்புள்ள அரசு நிலத்தை (ரிசர்வ் சைட்) மாநகராட்சி ஆணையாளர் கிராந்தி குமார் பாடி கண்டறிந்து, மீட்டு நடவடிக்கை மேற்கொண்டார்.
மகாலட்சுமி நகர்
திருப்பூர் மாநகராட்சி 60-வது வார்டுக்கு உட்பட்ட பகுதி மகாலட்சுமி நகர் ஆகும். இந்த பகுதி கடந்த 1987-ம் ஆண்டு ஆண்டிபாளையம் ஊராட்சியாக இருந்தது. அப்போது மனைப்பிரிவுகள் பிரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதில் 26.80 சென்ட் அளவுள்ள இடம் பூங்கா மற்றும் பொது பயன்பாட்டுக்காக அரசு நிலமாக (ரிசர்வ் சைட்டாக) ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த இடம் காலியாகவே இருந்துள்ளது.
அதன் பிறகு திருப்பூர் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு ஆண்டிப்பாளையம் ஊராட்சி திருப்பூர் மாநகராட்சியுடன் சேர்க்கப்பட்டது. இதுவரை அந்த பகுதி புதர் மண்டி கேட்பாரற்று கிடந்தது. அந்த இடம் குப்பை கொட்டும் இடமாகவும், சமூக விரோதிகள் கூடும் இடமாகவும் இருந்தது.
ரூ.3 கோடியே 25 லட்சம் இடம்
இந்தநிலையில் திருப்பூர் மாநகராட்சி ஆணையாளராக கிராந்தி குமார் பாடி பொறுப்பேற்றதில் இருந்து மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள ரிசர்வ் சைட் இடங்களை கண்டறியும் வகையில் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். அந்த அடிப்படையில் மகாலட்சுமி நகர் பகுதியில் இருந்த 26.80 சென்ட் அளவுள்ள அரசு நிலம்  கண்டுபிடிக்கப்பட்டு உடனடியாக மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
ஆணையாளர் மகாலட்சுமி நகர் சென்று சம்பவ இடத்தை பார்வையிட்டு அந்தப் பகுதியில் பொக்லைன் எந்திரம் மூலம் சுத்தம் செய்ய உத்தரவிட்டார். உடனடியாக பணிகளும் மேற்கொள்ளப்பட்டன. மாநகராட்சி செயற்பொறியாளர்கள் முகமது சபியுல்லா, உதவி ஆணையாளர் கண்ணன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர். அந்த இடத்தின் தற்போதைய மதிப்பு ரூ.3 கோடியே 25 லட்சம் ஆகும்.
பூங்கா அமைப்பு
அந்த இடம் சுத்தம் செய்யப்பட்டு தனியார் பங்களிப்புடன் பூங்கா அமைப்பதற்கான நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகிறார்கள். இதுபோல் மாநகராட்சி பகுதியில் அரசு நிலம் (ரிசர்வ் சைட்) உள்ள பகுதிகள் குறித்து பொதுமக்கள் மாநகராட்சி அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்கலாம் என்று அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர்.

மேலும் செய்திகள்