ஆதரவற்றோர் இல்லங்களில் அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு
தூத்துக்குடி மாவட்டத்தில் ஆதரவற்ற இல்லங்களில் அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு செய்தார்.;
ஆறுமுகநேரி:
தூத்துக்குடி மாவட்டத்தில் ஆதரவற்ற இல்லங்களில் அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு செய்தார்.
அமைச்சர் ஆய்வு
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரியை அடுத்துள்ள அடைக்கலாபுரம் செயின்ட் ஜோசப் அறநிலையம் சார்பில் நடத்தப்படும் சிறப்பு தத்தெடுப்பு நிலையம் மற்றும் மனவளர்ச்சி குன்றிய பெண்கள் பயிற்சி முகாம், ஆதரவற்ற குழந்தைகள் இல்லம், குழந்தைகள் காப்பகம், முதியோர் இல்லம், மாற்றுத்திறனாளிகள் இல்லம் ஆகியவற்றில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமை நலத்துறை அமைச்சர் கீதாஜீவன் நேற்று ஆய்வு செய்தார்.
அறநிலைய இயக்குனர் பிரமிள்டன் லோபோ அடிகளார், துணை இயக்குனர் ஷிபாகர் அடிகளார், பொருளாளர் பிரதீப் அடிகளார், செட்ரிக் பீரிஸ் அடிகளார் ஆகியோர் அமைச்சரை வரவேற்றனர்.
குழந்தையை கொஞ்சி மகிழ்ந்தார்
பின்னர் அமைச்சர் கீதாஜீவன் அங்குள்ள ஒவ்வொரு இல்லங்களுக்கும் நேரடியாக சென்று மாற்றுத்திறனாளிகள், மன வளர்ச்சி குன்றிய குழந்தைகள், முதியவர்களிடம் அவர்களுக்கு வழங்கப்படும் உணவு, உடை மற்றும் பாடத்திட்டங்கள், தங்கும் வசதி பற்றி கேட்டறிந்தார். மேலும் ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகள் இல்லத்திற்கு சென்ற அமைச்சர் அங்குள்ள 10 குழந்தைகள் தொட்டிலையும் பார்வையிட்டு அதில் ஒரு குழந்தையை தொட்டிலில் இருந்து எடுத்து தன் கையில் ஏந்தி கொஞ்சி மகிழ்ந்தார். மேலும் குழந்தைகள் பராமரிப்பு குறித்து அங்குள்ளவர்களிடம் கேட்டறிந்தார்.
மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், சமூக நலத்துறை இயக்குனர் ரத்னா, சமூக பாதுகாப்பு நலத்துறை இயக்குனர் வளர்மதி, சமூக நலத்துறை துணை இயக்குனர் நந்திதா, தூத்துக்குடி மாவட்ட சமூகநல அலுவலர் தனலட்சுமி, மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் இளையராஜா, திருச்செந்தூர் உதவி கலெக்டர் கோகிலா, திருச்செந்தூர் தாசில்தார் முருகேசன் ஆகியோர் உடன் இருந்தனர்.
பேட்டி
பின்னர் அமைச்சர் கீதாஜீவன் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் உள்ள 8 மாவட்டங்களை சேர்ந்த சமூகநலன் மற்றும் மகளிர் உரிமை நலத்துறை அதிகாரிகளுடன் தூத்துக்குடியில் ஆய்வு நடைபெறுகிறது. அதில் கூடுதல் பணியாக அடைக்கலாபுரம் அறநிலையத்தை சேர்ந்த ஆதரவற்றோர் காப்பகம் பகுதிகளில் ஆய்வு செய்யப்பட்டது. இங்கு ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகள் 10 பேர் உள்ளனர். இங்கு 100 குழந்தைகளுக்கு அரசு சார்பில் உதவித்தொகை வழங்கப்படுகிறது. மேலும் கூடுதலாக உள்ள 310 குழந்தைகளுக்கு அரசு சார்பில் தேவையான உதவி வழங்கிட நடவடிக்கை எடுக்கப்படும்.
அரசே ஏற்றுக்கொள்ளும்
தமிழகத்தில் மாநில அளவில் தத்தெடுக்கும் மையம் 16 இடங்களில் உள்ளன. இதில் 276 குழந்தைகள் உள்ளனர். அந்த குழந்தைகள் மத்திய, மாநில அரசுகளின் சட்ட விதிகளுக்குட்பட்டு தத்தெடுத்து வழங்கப்படுகிறது.
அந்த குழந்தைகளுக்கு கல்வி, உணவு, செலவுகளை அரசே ஏற்றுக்கொள்ளும். மேலும் வேலைவாய்ப்புகளில் டி.என்.பி.எஸ்.சி. அல்லாத வேலைவாய்ப்புள்ள இடங்களில் இந்த சமூக நல ஆதரவற்ற இல்லங்களில் வளரும் குழந்தைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். தமிழகத்தில் அனுமதியின்றி எந்த ஒரு ஆதரவற்றோர் நிலையமும், காப்பகமும் இல்லை.
இதுபற்றி ஆய்வு செய்யும்போது அங்கு பதிவு பெறாத குழந்தைகள் இல்லம் இருந்தால், அந்த இல்லத்தில் உள்ள குழந்தைகள் அனுமதி பெற்ற பராமரிப்பு இல்லங்களுக்கு மாற்றப்படுகிறார்கள்.
தொடர்ந்து அவர்கள் முறையாக அனுமதி பெற்ற பின்பு அந்த குழந்தைகள் மீண்டும் பழைய இல்லங்களுக்கு மாற்றப்படுவார்கள்.
இவ்வாறு அமைச்சர் கீதா ஜீவன் கூறினார்.
முதியோர் இல்லம்
இதையடுத்து அவர் ஆறுமுகநேரி சீனந்தோப்பு பகுதியில் செயல்பட்டு வரும் லைட் சோசியல் முதியோர் இல்லத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
முதியோர் இல்ல இயக்குனர் பிரேம்குமார், செயலாளர் ஜோன்ஸ், பொருளாளர் தியாகரன், மேலாளர் குளோரி ஆகியோர் அமைச்சரிடம் அங்கு வழங்கப்படும் உணவு மற்றும் நடவடிக்கை பற்றி விளக்கி கூறினர்.