ஆடி மாத பிறப்பையொட்டி பழனி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்
ஆடி மாத பிறப்பையொட்டி பழனி முருகன் கோவிலில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
பழனி:
ஆடி மாத பிறப்பையொட்டி பழனி முருகன் கோவிலில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
பழனி முருகன் கோவில்
அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலில் தைப்பூசம், பங்குனி உத்திரம், திருக்கார்த்திகை உள்ளிட்ட திருவிழா காலங்களில் சாமி தரிசனம் செய்வதற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள். அதேபோல் மாதபிறப்பு, கார்த்திகை, விடுமுறை நாட்களிலும் சாமி தரிசனம் செய்ய பழனிக்கு பக்தர்கள் படையெடுப்பார்கள்.
கொரோனா பரவல் காரணமாக கடந்த சில மாதங்களாக கோவிலில் தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. தற்போது கொரோனா பரவல் குறைந்ததை அடுத்து அரசின் விதிமுறைகளை பின்பற்றி கோவிலில் தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
ஆடி மாத பிறப்பு
இந்தநிலையில் நேற்று ஆடி மாத பிறப்பு என்பதால் பழனி முருகன் கோவிலில் தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். அதிகாலை முதலே கிரிவீதி, சன்னதிவீதி, திருஆவினன்குடி கோவில் ஆகிய இடங்களில் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. அப்போது பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்த சாமி தரிசனம் செய்தனர்.
இதேபோல் பழனி அடிவாரத்தில் இருந்து மலைக்கோவில் செல்வதற்கான சேவையில் மின் இழுவை ரெயில் மட்டும் இயக்கப்படுவதால் நேற்று அங்கு கூட்டம் காணப்பட்டது.
வெள்ளி கவசம்
மேலும் பழனி பகுதியில் கடந்த சில நாட்களாக பகலில் கடும் வெயில் நிலவி வருகிறது. இதனால் பக்தர்களின் நலனுக்காக கோவில் வெளிப்பிரகாரத்தில் கயிற்றால் ஆன தரைவிரிப்புகள் விரிக்கப்பட்டு தண்ணீர் தெளிக்கப்பட்டது.
இதற்கிடையே மாத பிறப்பையொட்டி மலைக்கோவிலில் உள்ள ஆனந்த விநாயகருக்கு வெள்ளிக்கவசம் அணிவிக்கப்பட்டு சிறப்பு யாகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது. இதில் பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.