நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை எதிரொலி ஒரே நாளில் 1½ அடி உயர்ந்த முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் விவசாயிகள் மகிழ்ச்சி

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த பலத்த மழையால் முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் ஒரே நாளில் 1½ அடி உயர்ந்து இருக்கிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Update: 2021-07-17 11:21 GMT

கூடலூர்:
முல்லைப்பெரியாறு அணை மூலம் தேனி உள்பட 5 மாவட்டங்கள் குடிநீர் மற்றும் பாசன வசதி பெறுகிறது. இதன் மொத்த உயரம் 152 அடியாகும். இந்தநிலையில் கடந்த சில நாட்களாக முல்லைப்பெரியாறு அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. 
இந்த மழை காரணமாக முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. 
1½ அடி உயர்வு
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் நேற்று முன்தினம் 127.25 அடியாகவும், நீர்வரத்து வினாடிக்கு 1,582 கனஅடியாகவும் இருந்தது. இந்நிலையில் நீர்வரத்து வினாடிக்கு 5ஆயிரத்து 79 கனஅடியாக அதிகரித்ததை தொடர்ந்து நேற்று நீர்மட்டம் ஒரே நாளில் 1½ அடி உயர்ந்து 128.80 அடியாக உள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 1,200 கன அடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. 4 ஆயிரத்து 439 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளான முல்லைப்பெரியாற்றில் நேற்று முன்தினம் 46 மி.மீ.மழையும், தேக்கடியில் 34.6 மி.மீ. மழையும் பெய்துள்ளது குறிப்பிடத்தக்கது. 
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவது  விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்