டெல்லி பயணம் பயனுள்ளதாக இருந்தது அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

தமிழக அரசின் சில கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற்றப்பட்டுள்ளன என்றும், டெல்லி பயணம் பயனுள்ளதாக இருந்தது என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Update: 2021-07-17 06:01 GMT
சென்னை, 

சென்னை ஜாபர்கான்பேட்டையில் உள்ள ஒரு பள்ளியில் முடிதிருத்துவோர் மற்றும் ஆட்டோ டிரைவர்களுக்கு சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாமை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று தொடங்கி வைத்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் தடுப்பூசி போடும் பணி சிறப்பாக இருக்கிறது என மத்திய சுகாதாரத்துறை மந்திரி தெரிவித்தார். மேலும், செங்கல்பட்டு தடுப்பூசி மையம், குன்னூரில் உள்ள பாஸ்டியர் தடுப்பூசி மையங்களை திறப்பது குறித்து பரிசீலிப்பதாகவும் அவர் கூறினார்.

மதுரை எய்ம்ஸ் ஆஸ்பத்திரி கட்டுமானப் பணியை உடனடியாக தொடங்கிட வேண்டும், 11 மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை உடனடியாக அனுமதிக்க வேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகள் மத்திய அரசிடம் தெரிவிக்கப்பட்டன. அதன்படி இன்று (நேற்று) எய்ம்ஸ் தொடர்பாக காணொலிக் காட்சி மூலம் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது.

மத்திய அரசிடம் வைக்கப்பட்ட கோரிக்கைகள் சில உடனடியாகவே நடந்திருக்கின்றன. அந்தவகையில் டெல்லி பயணம் பயனுள்ளதாக அமைந்தது. 3-வது அலையைப் பொறுத்தவரை இங்கிலாந்து போன்ற நாடுகளில் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. அங்கு தினசரி பாதிப்பு 30 ஆயிரத்தைக் கடந்தாலும், இறப்பு 20 முதல் 25 ஆகவே இருக்கிறது.

இதற்கு காரணம் அங்கு அவர்கள் முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்டதுதான். கொரோனாவுக்கு தடுப்பூசி மட்டும்தான் ஒரே தீர்வு. அதை கூடுதலாக கேட்டுப்பெறும் நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்படும். தமிழகத்தில் 3-வது அலையை எதிர்கொள்ளும் வகையில் ஆக்சிஜன், படுக்கைகள் உள்பட போதுமான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மாநிலத்தில் ஒருவருக்குக்கூட ஜிகா வைரஸ் பாதிப்பு இல்லை. 4 ஆயிரம் பேருக்கு கருப்பு பூஞ்சை பாதிப்பு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

அதையடுத்து ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரியில் அமைச்சர் சுப்பிரமணியன் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனாவுக்கு பிந்தைய நல்வாழ்வு மையமும், ஆக்சிஜன் ஜெனரேட்டரும் திறந்து வைக்கப்பட்டுள்ளன. இந்த ஆஸ்பத்திரியில் 47 ஆயிரத்து 12 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுள்ளனர்.

மத்திய அரசின் நிதி பங்களிப்புடன் 70 இடங்களில் ஆக்சிஜன் உற்பத்தி மையங்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. 32 இடங்களில் பணி முடிவடைந்துள்ளது என்றார்.

இந்த நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, சுகாதாரத் துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், ஆஸ்பத்திரி டீன் டாக்டர் ஜெயந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்