டிப்பர் லாரி சக்கரத்தில் சிக்கி வாலிபர் பலி ஆத்திரத்தில் கண்ணாடியை அடித்து நொறுக்கிய பொதுமக்கள்
சென்னை திரு.வி.க. நகர், டிப்பர் லாரி சக்கரத்தில் சிக்கி வாலிபர் பலி ஆத்திரத்தில் கண்ணாடியை அடித்து நொறுக்கிய பொதுமக்கள்.
திரு.வி.க. நகர்,
சென்னை திரு.வி.க. நகர் கே.சி.கார்டன் 5-வது தெருவைச் சேர்ந்தவர் உலகநாதன் (வயது 24). இவர், ஜெராக்ஸ் எந்திரம் சர்வீஸ் சென்டரில் வேலை செய்து வந்தார்.
நேற்று மதியம் உலகநாதன், திரு.வி.க. நகர் எஸ்.ஆர்.பி. கோவில் வடக்கு சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது நிலைதடுமாறி எதிரே வந்த டிப்பர் லாரிக்கு அடியில் விழுந்துவிட்டார். அவர் மீது டிப்பர் லாரியின் பின்பக்க சக்கரம் ஏறி இறங்கியது. இதில் உலகநாதன் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
விபத்து நடந்த உடன் லாரியை நிறுத்திவிட்டு டிரைவர் தப்பி ஓடிவிட்டார். இந்த விபத்தை கண்டு ஆத்திரம் அடைந்த அங்கிருந்த பொதுமக்கள், வாலிபரின் உயிரை பறித்த டிப்பர் லாரியின் முன்பக்க கண்ணாடியை அடித்து நொறுக்கினர்.
இதுபற்றி திருமங்கலம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய டிப்பர் லாரி டிரைவரை தேடி வருகிறார்கள்.
பலியான உலகநாதனுக்கு திருமணமாகி நந்தினி என்ற மனைவியும், 2 வயதில் ஒரு குழந்தையும் உள்ளது.