மீஞ்சூர் அருகே மின்னல் தாக்கி விவசாயி உடல் கருகி பலி
மீஞ்சூர் அருகே இடியுடன் நேற்று மாலை மழை பெய்த நிலையில், மின்னல் தாக்கி விவசாயி உடல் கருகி பலியானார்.
மீஞ்சூர்,
திருவள்ளூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான ஈக்காடு, புட்லூர், மணவாளநகர், ஒண்டிகுப்பம், மேல்நல்லாத்தூர், திருப்பாச்சூர், கடம்பத்தூர், பேரம்பாக்கம், அகரம், கூவம், குமாரச்சேரி, இருளஞ்சேரி, திருமழிசை, வெள்ளவேடு சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை திடீரென கருமேகம் சூழ்ந்து சூறைக்காற்றுடன் பலத்தமழை பெய்தது.
இந்த நிலையில், மீஞ்சூர் அருகே வாயலூர் கிராமத்தில் வசித்து வந்த விவசாயி முருகன் (வயது 43). நேற்று மாலை மழையில் விவசாய பொருட்கள் மழையால் நனையாமல் இருக்க பிளாஸ்டிக் விரிப்பை வாங்கி வருவதற்காக பொன்னேரி சென்றார்.
மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு திரும்பி வந்தபோது, திருவெள்ளைவாயல் இலவம்பேடு நெடுஞ்சாலை வேளூர் கிராமம் அருகே மின்னல் தாக்கி முருகன் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியானார். தகவலறிந்த காட்டூர் போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து காட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.