கடத்தலுக்கு உடந்தையாக இருப்பவர்களை கண்காணிக்க விமானநிலைய வெளிப்புறத்தில் கூடுதல் கேமராக்களை பொருத்த நடவடிக்கை
கடத்தலுக்கு உடந்தையாக இருப்பவர்களை கண்காணிக்க விமானநிலைய வெளிப்புறத்தில் கூடுதல் கேமராக்களை பொருத்த வேண்டும் என விமானநிலைய உறுப்பினர்கள் குழு ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
செம்பட்டு,
கடத்தலுக்கு உடந்தையாக இருப்பவர்களை கண்காணிக்க விமானநிலைய வெளிப்புறத்தில் கூடுதல் கேமராக்களை பொருத்த வேண்டும் என விமானநிலைய உறுப்பினர்கள் குழு ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
ஆலோசனை கூட்டம்
திருச்சி பன்னாட்டு விமானநிலைய குழு உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் விமானநிலைய வளாகத்தில் உள்ள அரங்கில் நேற்று முன்தினம் நடந்தது. மாநகர போலீஸ் கமிஷனர் அருண் தலைமை தாங்கினார். விமானநிலைய இயக்குனர் தர்மராஜ் முன்னிலை வகித்தார்.
இந்த குழுவில் மாவட்ட கலெக்டர் சிவராசு, போலீஸ் சூப்பிரண்டு மூர்த்தி, விமானநிலைய பாதுகாப்புக்குழு, பாதுகாப்புபிரிவு, இந்திய விமானப்படை, தேசிய பாதுகாப்புக்குழு, குடியேற்ற பணியகம், சுங்கத்துறையினர், உளவுத்துறை பணியகம், விமானநிலைய அதிகாரிகளை உறுப்பினர்களாக கொண்டு கூடடம் நடத்தப்பட்டது.
கூட்டத்தில், பாதுகாப்பு கருதி அடிப்படை தேவைகள் மற்றும் தொழில்நுட்ப விவரக்குறிப்பு, தீவிரவாத தடுப்பு நடவடிக்கை ஒத்திகை, விமானநிலையத்தில் இருந்து 3 கி.மீ.தூரம் ட்ரோன் பறப்பதற்கு தடை செய்யப்பட்ட பகுதி என்பது பற்றி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். ஜம்மு-காஷ்மீரில் ஏற்பட்ட விபத்துக்கள் போன்று எவ்வித விபத்துக்கள் ஏற்படா வண்ணம் ட்ரோன் கண்காணிப்பு தொழில்நுட்பத்தை தக்க உபகரணங்களுடன் எதிர்கொள்ள வேண்டும்.
விமானநிலைய விரிவாக்க பணிக்கு இடையூறாக இருக்கும் குடியிருப்பு பகுதிகளை அப்புறப்படுத்தவும், அவர்களுக்கு மாவட்ட நிர்வாகம்/குடிசை மாற்று வாரியம் மூலமாக உரிய மாற்று ஏற்பாடுகளை செய்து தருவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
வெளிப்புற பகுதியில் கேமராக்கள்
மேலும், விமானஓடுதளத்தின் அருகாமையில் தேசிய நெடுஞ்சாலை இருப்பதால் பாதுகாப்பு கருதி தரைவழிப்பாலம் அல்லது சாலையின் உயரத்தை குறைப்பது பற்றியும், விமானகடத்தல் ஒத்திகையின்போது, தேசிய பாதுகாப்பு குழுவினருக்கு முன்கூட்டியே தகவல் தெரிவித்து அவர்களையும் சேர்த்து ஒத்திகை நடத்த வேண்டும். விமானநிலைய வெளிப்புற பகுதிகளில் கூடுதல் சி.சி.டி.வி. கேமராக்களை அமைத்தால் கடத்தல் செய்பவருக்கும், கடத்தலுக்கு உடந்தையாக இருப்பவர்களையும் எளிதில் கண்காணித்து கடத்தலை தடுக்க முடியும். விமானநிலையத்தின் நுழைவுவாயில் மற்றும் வெளியே செல்லும் பகுதியில் காவலர் சாவடி அமைக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.