ஈரோடு மாவட்டத்தில் இருந்து திருச்சிக்கு லாரியில் கடத்தி வந்த 23 டன் நெல் மூட்டைகள் பறிமுதல்; 3 பேர் கைது
ஈரோட்டில் இருந்து திருச்சிக்கு லாரியில் கடத்தி வந்த 23 டன் நெல் மூட்டைகளை உணவு கடத்தல் தடுப்புபிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.;
திருச்சி,
ஈரோட்டில் இருந்து திருச்சிக்கு லாரியில் கடத்தி வந்த 23 டன் நெல் மூட்டைகளை உணவு கடத்தல் தடுப்புபிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
நெல் மூட்டைகள் கடத்தல்
ஈரோடு மாவட்டத்தில் இருந்து திருச்சி மாவட்டம் துறையூருக்கு நேற்று அதிகாலை டாரஸ் லாரியில் நெல் மூட்டைகளை கடத்தி வருவதாக உணவு கடத்தல் தடுப்புபிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவசுப்பிரமணியன், சப்-இன்ஸ்பெக்டர் அலாவுதீன் ஆகியோர் தலைமையில் செல்வராஜ், எட்வின், ராஜகோபால், கார்த்திக் உள்ளிட்ட போலீசார் நேற்று அதிகாலை 3.30 மணி அளவில் துறையூர் எரக்குடி அருகே டாரஸ் லாரியை மடக்கி பிடித்து சோதனை நடத்தினார்கள்.
அப்போது லாரியில் உரிய ஆவணங்கள் இல்லாமல் 23 டன் நெல் மூட்டைகளை துறையூரில் உள்ள ஒரு மில்லுக்கு கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து லாரியுடன் நெல்மூட்டைகளை பறிமுதல் செய்தனர்.
3 பேர் கைது
இது தொடர்பாக உணவு கடத்தல் தடுப்புபிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, லாரியை ஓட்டி வந்த தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தை சேர்ந்த டிரைவர் சரவணராஜா (வயது 31), ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த புரோக்கர் ஹரிதாஸ் (34), கரூர் குளித்தலையை சேர்ந்த மற்றொரு புரோக்கரான அழகேசன் (36) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
பின்னர் லாரி மற்றும் நெல்மூட்டைகளை திருச்சி டி.வி.எஸ். டோல்கேட் பகுதியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக குடோனில் ஒப்படைத்தனர்.