யாரையும் கூட்டு சேர்க்காமல் 39 மோட்டார் சைக்கிள்களை, தனி ஆளாக திருடிய பலே ஆசாமி கைது

யாரையும் கூட்டு சேர்க்காமல் தனி ஆளாக 39 மோட்டார் சைக்கிள்களை திருடிய ஆசாமி கைது செய்யப்பட்டார்.;

Update: 2021-07-17 00:34 GMT

திருச்சி,

யாரையும் கூட்டு சேர்க்காமல் தனி ஆளாக 39 மோட்டார் சைக்கிள்களை திருடிய ஆசாமி கைது செய்யப்பட்டார்.

தனிப்படை அதிரடி

திருச்சி மாநகர பகுதிகளில் இருசக்கர வாகனத்திருட்டில் ஈடுபட்டு வரும் ஆசாமிகளை பிடிக்க, திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவுப்படி தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகள் தேடப்பட்டு வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் கோட்டை குற்றப்பிரிவு தனிப்படையினர் இ.பி.ரோட்டின் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர், போலீசாரை கண்டதும் தப்பிக்க முயன்றார். அவரை பிடித்து விசாரணை செய்ததில், முன்னுக்குப்பின் முரணாக தகவல் தெரிவித்தார்.

தனி ஆளாக 39 மோட்டார் சைக்கிள்கள் திருட்டு

விசாரணையில், தனது பெயர் கிரிநாதன் (வயது 44), திருச்சியை அடுத்த புங்கனூர் காந்திநகரை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. தொடர் விசாரணையில், யாரையும் கூட்டணி சேர்க்காமல் தனிநபராக, 39 ேமாட்டார் சைக்கிள்களை திருடியதை ஒப்புக்கொண்டார்.

அவற்றுல் திருச்சி மாநகர எல்லைக்குட்பட்ட கோட்டை, உறையூர், தில்லைநகர் போலீஸ் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் தொடர்புடைய 13 வாகனங்களும், பெரம்பலூர், விராலிமலை, விழுப்புரம் பகுதிகளில் திருடப்பட்ட தலா ஒரு வாகனமும் என மொத்தம் 16 வாகனங்களின் உரிமையாளர்கள் அடையாளம் தெரிந்தது. மோட்டார் சைக்கிள்களை அவற்றின் உரிமையாளர்களிடம் ஒப்படைக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

23 பேர் அடையாளம் தெரியவில்லை

மீதமுள்ள 23 மோட்டார் சைக்கிள்களின் உரிமையாளர்களை அடையாளம் கண்டு பிடிக்க முடியவில்லை. அடையாளம் தெரிந்ததும் சட்டப்படி ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தனிப்படை போலீசார் தெரிவித்தனர்.

இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட கிரிநாதனை கோட்டை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 39 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்த தனிப்படையினரை திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அருண் பாராட்டினார்.

மேலும் செய்திகள்