கேரளாவுக்கு காரில் கடத்த முயன்ற ஒரு டன் ரேஷன் அரிசி பறிமுதல்; 2 பேர் கைது
தென்காசியில் இருந்து கேரளாவுக்கு காரில் கடத்த முயன்ற ஒரு டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
தென்காசி:
தென்காசி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கற்பகராஜ் தலைமையில் போலீசார் நேற்று மதியம் தென்காசி- ஆய்க்குடி சாலையில் வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக வந்த காரை வழிமறித்து போலீசார் சோதனை செய்தனர். இதில் காரில் மூட்டைகளில் மொத்தம் ஒரு டன் ரேஷன் அரிசி இருந்ததும், அவற்றை கேரளாவுக்கு கடத்தி செல்ல முயன்றதும் தெரியவந்தது.
இதையடுத்து காரில் இருந்த தென்காசி அருகே அனந்தபுரத்தைச் சேர்ந்த ராமையா மகன் மாரியப்பன் (வயது 35), அகரக்கட்டை சேர்ந்த முருகன் மகன் ராமர் (25) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் ரேஷன் அரிசி மூட்டைகளுடன் காரையும் பறிமுதல் செய்து, உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.