கொலை வழக்குகளில் கைதான 7 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
நெல்லை மாவட்டத்தில் கொலை வழக்குகளில் கைதான 7 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
நெல்லை:
நெல்லை அருகே உள்ள முன்னீர்பள்ளம் புதுகிராமம் பகுதியை சேர்ந்த சங்கரன் என்பவரின் மகன் முருகன் (வயது 24). தென்திருபுவனத்தை சேர்ந்த காளி என்ற கருப்பசாமி மகன் பேச்சித்துரை (22), தருவை முருகன் மகன் முத்து (20), கீழமுன்னீர்பள்ளம் அல்லல்காத்தான் மகன் அருணாச்சலம் (21), முருகன் மகன் இசக்கிபாண்டி (20) மற்றும் மாரிமுத்து மகன் சங்கரலிங்கம் என்ற சங்கர் (22) ஆகியோர் கொலை வழக்கில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வந்துள்ளனர்.
இவர்களை முன்னீர்பள்ளம் போலீசார் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்துள்ளனர். இந்த நிலையில் அவர்கள் 6 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து கலெக்டர் விஷ்ணு, அந்த 6 பேரையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இந்த உத்தரவு நகலை முன்னீர்பள்ளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் நேற்று பாளையங்கோட்டை மத்திய சிறையில் சமர்ப்பித்தார்.
திசையன்விளை அப்புவிளை நடுத்தெருவை சேர்ந்த மனோகரன் மகன் ஸ்ரீமுருகன் (30). இவர் களக்காடு மற்றும் திசையன்விளை பகுதியில் கொலை மற்றும் கொள்ளை வழக்குகளில் ஈடுபட்டு வந்துள்ளார். இவரும் கலெக்டர் உத்தரவுப்படி குண்டர் சட்டத்தின் கீழ் நேற்று பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.