மேகதாது திட்டத்திற்கு விரைவாக அனுமதி வழங்க மோடியிடம் எடியூரப்பா நேரில் கோரிக்கை
டெல்லியில் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து பேசிய எடியூரப்பா, மேகதாது திட்டத்திற்கு விரைவாக அனுமதி வழங்குமாறு கோரிக்கை விடுத்தார். பின்னர் எடியூரப்பா கூறுகையில், சாதகமான பதிலை பிரதமர் கூறியிருப்பதாக தெரிவித்தார்.
பெங்களூரு:
மேகதாது அணை
கர்நாடக மாநிலம் ராமநகர் மாவட்டம் கனகபுரா தாலுகாவில் மேகதாது என்ற இடத்தில் காவிரியின் குறுக்கே புதிய அணை கட்ட கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. ரூ.9 ஆயிரம் கோடி செலவில் கட்டப்பட உள்ள இந்த அணை திட்டத்திற்கு அனுமதி வழங்க கோரி திட்ட வரைவு அறிக்கையை மத்திய அரசிடம் தாக்கல் செய்துள்ளது.
இதற்கு தமிழ்நாடு அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. தமிழ்நாட்டின் அனைத்துக்கட்சி குழு நேற்று டெல்லியில் ஜல்சக்தித்துறை மந்திரி கஜேந்திரசிங் ஷெகாவத்தை நேரில் சந்தித்து மேகதாது திட்டத்தை அனுமதிக்கக்கூடாது என்று முறையிட்டது.
மோடியுடன் சந்திப்பு
இந்த நிலையில் நேற்று டெல்லி சென்ற கர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பா இரவு 7 மணியளவில் பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பு சுமார் 10 நிமிடங்கள் மட்டுமே நீடித்தது. இந்த சந்திப்பின்போது மேகதாது திட்டம் உள்பட பல்வேறு நீர்ப்பாசன திட்டங்கள் குறித்து விவாதித்ததாகவும், அவற்றுக்கு விரைவாக அனுமதி வழங்குமாறு எடியூரப்பா கோரிக்கை விடுத்தார்.
சாதகமான பதில்
இந்த சந்திப்புக்கு பிறகு நிருபர்களுக்கு பேட்டி அளித்த எடியூரப்பா, "பிரதமரை சந்தித்து பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினேன். அனைத்து விஷயங்களுக்கும் மோடி சாதகமான பதில் கூறினார். பிரதமரிடம் விவாதித்த விஷயங்கள் குறித்து நாளை (இன்று) விவரமாக கூறுகிறேன். கர்நாடக ஆட்சி தலைமை மாற்றம் குறித்து எனக்கு எதுவும் தெரியாது. அதுபற்றி நான் விவாதிக்கவில்லை. நாளை (அதாவது இன்று) மத்திய மந்திரிகளை சந்திக்கிறேன்" என்றார்.
இந்த நிலையில் எடியூரப்பா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பத்ரா மேல் அணை திட்டத்தை தேசிய திட்டமாக அறிவிக்க வேண்டும், பெங்களூரு வெளிவட்ட சாலை திட்டத்திற்கு ரூ.6 ஆயிரம் கோடி நிதி ஒதுக்க வேண்டும் என்று பிரதமரிடம் கேட்டுக்கொண்டேன். மேலும் மேகதாது திட்டத்திற்கு விரைவாக அனுமதி வழங்கவும் கோரிக்கை விடுத்துள்ளேன். பெங்களூருவில் அமெரிக்க தூதரக அலுவலகம் தொடங்க உதவ வேண்டும் என்றும் கேட்டுள்ளேன் என்று கூறப்பட்டுள்ளது.
இன்று மந்திரிகளை சந்திக்கிறார்
எடியூரப்பா இன்று (சனிக்கிழமை) பல்வேறு துறைகளின் மந்திரிகளை சந்தித்து பேசுகிறார். அதன் பிறகு இன்று மாலையே பெங்களூரு திரும்புகிறார். ஒருபுறம் தமிழ்நாட்டின் அனைத்துக்கட்சி குழு மத்திய ஜல்சக்தித்துறை மந்திரியை நேரில் சந்தித்து, மேகதாது திட்டத்தை அனுமதிக்கக்கூடாது என கோரி கடிதம் வழங்கியுள்ளது.
மற்றொருபுறம் முதல்-மந்திரி எடியூரப்பா பிரதமரை சந்தித்து, மேகதாது திட்டத்திற்கு விரைவாக அனுமதி வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார். மேகதாது விஷயத்தில் இரு மாநிலங்களின் பிரதிநிதிகளும் ஒரே நாளில் டெல்லியில் முகாமிட்டதால், இந்த விவகாரம் தீவிரம் அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.