வீட்டில் பதுக்கிய 792 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
பழனியில், வீட்டில் பதுக்கி வைத்திருந்த 792 கிலோ புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக வாலிபர் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
பழனி:
பழனி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசுக்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தது.
இதையடுத்து போலீசார் பழனி பகுதியில் உள்ள கடைகளில் புகையிலை பொருட்கள் விற்பனையை ரகசியமாக கண்காணித்து வந்தனர். இந்நிலையில் பழனி புதுநகரில் உள்ள வீட்டில் குட்கா, புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக பழனி போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதைத்தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் மாரிமுத்து தலைமையிலான போலீசார் புதுநகரில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள ஒரு வீட்டில் அட்டை பெட்டிகள் மற்றும் சாக்கு மூட்டைகளில் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தது.
போலீஸ் விசாரணையில், அந்த வீட்டில் அதே பகுதியை சேர்ந்த அக்பர் மகன் சாகுல்அமீது (வயது 31) என்பவர் குளிர்பான குடோனாக பயன்படுத்தி வருவது தெரியவந்தது.
மேலும் அந்த வீட்டில் அவர் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்து பழனி பகுதியில் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
மேலும் குடோனில் இருந்த 792 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பொருட்களின் மதிப்பு ரூ.5 லட்சம் என்று கூறப்படுகிறது.