நெல்லை அரசு மருத்துவக்கல்லூரியில் தடுப்பூசி போட குவிந்த மக்கள்

நெல்லை அரசு மருத்துவக்கல்லூரியில் கோவேக்சின் தடுப்பூசி போட மக்கள் குவிந்தனர்.

Update: 2021-07-16 20:24 GMT
நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற சுகாதார நிலையங்கள், கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட 84 மையங்களில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் ரெட்டியார்பட்டி, திருக்குறுங்குடி, முக்கூடல், வைராவிகுளம், முனைஞ்சிப்பட்டி, திசையன்விளை, பணகுடி ஆகிய மையங்களில் நேற்று கோவேக்சின் தடுப்பூசி போடப்படும் என்றும், மற்ற இடங்களில் கோவிஷீல்டு தடுப்பூசி போடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

இதனால் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி உள்ளிட்ட மையங்களில் கோவேக்சின் தடுப்பூசி போடுவதற்காக மக்கள் கூட்டம் அலைமோதியது. பெரும்பாலானவர்கள் கோவேக்சின் தடுப்பூசி 2-வது தவணையாக செலுத்த வந்தனர். காலை 7 மணியில் இருந்தே மக்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றனர். அவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு, காலை 9 மணியில் இருந்து தடுப்பூசி போடப்பட்டது. மதியம் 12 மணி அளவில் 600 பேருக்கு கோவேக்சின் தடுப்பூசி போடப்பட்டது. பின்னர் தடுப்பூசி தீர்ந்ததால், பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

இதேபோன்று ரெட்டியார்பட்டியில் 200 பேருக்கும், பணகுடியில் 150 பேருக்கும், வைராவிகுளத்தில் 80 பேருக்கும், திருக்குறுங்குடி, முனைஞ்சிப்பட்டி, திசையன்விளையில் தலா 50 பேருக்கும் தடுப்பூசி போடப்பட்டது. மாவட்டம் முழுவதும் நேற்று 1,280 பேருக்கு கோவேக்சின் தடுப்பூசி போடப்பட்டது.

பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவக்கல்லூரியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது. அந்த கல்லூரியில் பயிலும் மாணவ-மாணவிகள் 88 பேருக்கும், அலுவலர்களுக்கும் கோவிஷீல்டு தடுப்பூசி போடப்பட்டது.
கல்லூரி முதல்வர் திருத்தணி, டாக்டர்கள் ராமசாமி, அப்துல் காதர் மற்றும் பேராசிரியர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்