கருவேல மரங்களை வெட்டிக்கொள்ள அனுமதி வேண்டும்

நீர் நிலைகளில் கருவேல மரங்களை வெட்டிக்கொள்ள அனுமதிக்க வேண்டும் என குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

Update: 2021-07-16 20:19 GMT
விருதுநகர்,
நீர் நிலைகளில் கருவேல மரங்களை வெட்டிக்கொள்ள அனுமதிக்க வேண்டும் என குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். 
குறைதீர்க்கும் கூட்டம் 
விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தை கலெக்டர் மேகநாதரெட்டி குத்துவிளக்கேற்றி  தொடங்கி வைத்தார். 
இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் மற்றும் அலுவலர்களுக்கு கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமை கலெக்டர் தொடங்கி வைத்தார். இதில் 35 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து, நுண்ணீர்பாசன பதிவு சிறப்பு முகாமையும் தொடங்கி வைத்தார். 
பாராட்டு சான்றிதழ் 
தொடர்ந்து மாநில அளவில் 2019-2020-ம் நிதியாண்டில் பயிர் விளைச்சல் போட்டியில் வெற்றி பெற்ற விவசாயிகளுக்கு பரிசுத்தொைகயும், பாராட்டு சான்றிதழும் வழங்கப்பட்டது. 
 மேலும், வேளாண்மை பொறியியல் துறை மூலம் எந்திரமயமாக்கல் திட்டத்தின் கீழ் விவசாயிகள் பயன்பெறும் வண்ணம் துண்டு பிரசுரத்தையும்,  2021-2022-ம் நிதியாண்டிற்கான கடன் திட்ட அறிக்கையினையும்  கலெக்டர் மேகநாதரெட்டி வெளியிட்டார்.
கொள்முதல் நிலையம் 
மாவட்டத்தில் எதிர்வரும் பருவ மழையினை விவசாயிகள் நல்ல முறையில் பயன்படுத்துவதற்கு வேளாண்மைத்துறை, வேளாண்மை பொறியியல் துறை மற்றும் தோட்டக்கலைத்துறை மூலம்  செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.
  சாத்தூர் கொப்பரை தேங்காய் கொள்முதல் நிலையத்தை வத்திராயிருப்புக்கு மாற்றவும், தள்ளுபடி செய்யப்பட்ட நகைக்கடனுக்குரிய அடமான நகைகளை திரும்ப பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கவும், வத்திராயிருப்பு பகுதியில் உலர் களம், சேமிப்பு கிடங்கு கட்டித்தரவும், நீர் நிலைகளில் சீமை கருவேல மரங்களை எவ்வித அனுமதியின்றி வெட்டிக்கொள்வற்கு அனுமதிக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்து விவசாயிகள் வலியுறுத்தினர். 
நீர் நிலைகளின் தொடர்பான குறைகளை களைந்திட பொதுப்பணித்துறையுடன் தனியாக ஆய்வு கூட்டம் நடத்தி தீர்வு காணவும், இனிவரும் காலங்களில் விவசாயிகளிடமிருந்து பெறப்படும் மனுக்களுக்கு உரிய பதிலினை மறு கூட்டத்திற்கு வருவதற்குள் சமர்ப்பிக்கவும், சம்பந்தப்பட்ட  அரசு அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார். 
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மங்களராமசுப்ரமணியன், வேளாண்மை இணை இயக்குனர் உத்தண்டராமன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) சங்கர்.எஸ்.நாராணயன், கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் திலீப்குமார், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் சண்முகவேல், விவசாயிகள், அலுவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்