மரவள்ளிக்கிழங்கு அறுவடை தீவிரம்

மடத்துக்குளம் பகுதியில் மரவள்ளிக்கிழங்கு அறுவடை தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் சிறு வியாபாரிகள் கைகொடுப்பதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

Update: 2021-07-16 20:17 GMT
போடிப்பட்டி 
மடத்துக்குளம் பகுதியில் மரவள்ளிக்கிழங்கு அறுவடை தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் சிறு வியாபாரிகள் கைகொடுப்பதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
மாற்றுப்பயிர் சாகுபடி
மடத்துக்குளம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆண்டு பயிரான கரும்பு சாகுபடியில் அதிக எண்ணிக்கையிலான விவசாயிகள் ஈடுபட்டு வந்தனர். ஆனால் தண்ணீர் பற்றாக்குறை, போதிய விலையின்மை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தற்போது கரும்பு சாகுபடியில் விவசாயிகளின் ஆர்வம் குறைந்துள்ளது. கரும்புக்கு மாற்றாக ஆண்டு பயிரான மரவள்ளி கிழங்கு சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்ட தொடங்கியுள்ளனர். தற்போதைய சூழலில் மரவள்ளிக் கிழங்கு கொள்முதல் செய்ய பெரிய வியாபாரிகள் முன்வராத நிலையில் சிறு வியாபாரிகளே கைகொடுத்து வருவதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-
தற்போதைய சூழலுக்கு ஏற்ப வெள்ளாமையை மாற்றியமைத்தால் மட்டுமே விவசாயிகள் தப்பிக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. மடத்துக்குளம் பகுதியில் கரும்புக்கு மாற்றாக பல விவசாயிகள் காய்கறிப் பயிர்களை தேர்வு செய்துள்ளனர். ஆனால் காய்கறிப் பயிர்களிலும் அடிக்கடி ஏற்படும் விலை சரிவு விவசாயிகளுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தி விடுகிறது. மேலும் அதிக நீர் தேவை மற்றும் கூலி ஆட்கள் பற்றாக்குறை காய்கறி சாகுபடிக்கு சவாலாக உள்ளது.
உற்பத்தித்திறன் அதிகம்
அதேநேரத்தில் குறைந்த அளவு நீரில் அதிக பராமரிப்பில்லாத நிலையிலும் கூடுதல் மகசூல் தரக்கூடிய பயிராக மரவள்ளிக் கிழங்கு உள்ளது. ஒரு ஏக்கரில் கரும்பு சாகுபடி செய்வதற்கான தண்ணீரை பயன்படுத்தி 4 ஏக்கரில் மரவள்ளிக் கிழங்கு சாகுபடி செய்ய முடியும். இது மனிதர்களுக்கான உணவாக மட்டுமல்லாமல் கால்நடைகளுக்கு உணவாகவும் பயன்படுகிறது. 
மேலும் ஜவ்வரிசி, ஸ்டார்ச் போன்றவற்றின் உற்பத்தியில் தொழிற்சாலை மூலப் பொருளாகப் பயன்படுகிறது. 
இது அண்டை மாநிலமான கேரள மக்களின் உணவில் முக்கிய இடம் பிடிக்கிறது. அங்கு அதிக பரப்பளவில் மரவள்ளி சாகுபடி செய்யப்பட்டாலும் தமிழகத்திலேயே மரவள்ளி விளைச்சல் அதிக அளவில் உள்ளது. இங்குள்ள மண் வளம் மற்றும் பருவநிலையால் இங்கு விளைவிக்கப்படும் மரவள்ளியின் உற்பத்தித்திறன் அதிகரித்து அதிக மகசூல் கொடுப்பதே இதற்குக் காரணமாகும்.
சிறு வியாபாரிகள்
மரவள்ளிக்கிழங்குகளை 9 மாதத்தில் சாகுபடி செய்வது சிறந்ததாக இருக்கும்.ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக வியாபாரிகள் யாரும் வராததால் அறுவடையில் தாமதம் ஏற்பட்டது.
ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் மரவள்ளிக் கிழங்குகளை விற்பனை செய்வதற்கு தோட்டக்கலைத்துறையினர் பல்வேறு வழிகாட்டல்களை வழங்கினர். ஆனாலும் மரவள்ளிக் கிழங்கை கொள்முதல் செய்வதில் பெரிய வியாபாரிகள் ஆர்வம் காட்டவில்லை. சில இடைத்தரகர்கள் மொத்தமாக கொள்முதல் செய்யத் தயாராக இருந்த போதிலும் ஒரு கிலோ ரூ. 3 என்ற மிகக் குறைந்த விலைக்கே வாங்க முன் வந்தனர். 
அதேநேரத்தில் சிறுவியாபாரிகள் ஒரு கிலோ ரூ. 9 வரை விலை கொடுத்து வாங்க முன் வந்துள்ளனர். தினசரி 10-க்கும் மேற்பட்ட சிறு வியாபாரிகள் தோட்டத்துக்கே வந்து அவர்களுக்குத் தேவையான அளவில் அறுவடை செய்து, கொண்டு செல்கிறார்கள். 
தற்போதைய நிலையில் காய்கறிப் பயிர்களைப்போல மரவள்ளிக் கிழங்கும் தினசரி வருமானம் கொடுத்து வருகிறது.
இவ்வாறு  விவசாயிகள் கூறினர்.

மேலும் செய்திகள்