புதுக்கோட்டை சந்தையில் ஆடுகள் வாங்க குவிந்த வியாபாரிகள்

பக்ரீத் பண்டிகையொட்டி புதுக்கோட்டை சந்தையில் ஆடுகள் வாங்க வியாபாரிகள் குவிந்தனர். லட்சக்கணக்கான ரூபாய்க்கு வியாபாரம் நடைபெற்றது.;

Update: 2021-07-16 19:54 GMT
புதுக்கோட்டை
புதுக்கோட்டை
பக்ரீத் பண்டிகை
வருகிற 21-ந் தேதி, பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி முஸ்லிம்கள் ஏழைகளுக்கும், உறவினர்களுக்கும் ஆட்டிறைச்சியை குர்பானியாக கொடுப்பது வழக்கம். பண்டிகையொட்டி இறைச்சி கடைகளில் ஆட்டிறைச்சி விற்பனை அமோகமாக நடைபெறும். இதையொட்டி ஆட்டு சந்தைகளில் ஆடுகள் விற்பனை அமோகமாக நடைபெறும். வியாபாரிகளும், பொதுமக்களும் வந்து ஆடுகளை வாங்கி செல்வது உண்டு. இதேபோல ஆடுகள் வளர்ப்பவரும் ஆடுகளை சந்தைக்கு கொண்டு வந்து விற்பார்கள்.
ஆடுகள் விற்பனை
இந்தநிலையில் பக்ரீத் பண்டிகையொட்டி புதுக்கோட்டையில் ஆட்டு சந்தையில் நேற்று ஆடுகள் வாங்க வியாபாரிகள் குவிந்தனர். மேலும் ஆடுகள் வளர்ப்பவர்களும் தங்களது ஆடுகளை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். இதனால் கூட்டம் அலைமோதியது. ஆடுகள் விற்பனையும் களைகட்டியது. குறைந்தது ரூ.5 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை விற்பனையானது. முஸ்லிம்கள் சிலரும் பண்டிகைக்காக ஆடுகளை வாங்கிச்சென்றனர். 
கொரோனா ஊரடங்கிற்கு பின், ஆட்டு சந்தை நேற்று முதல் அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. இதனால் வியாபாரிகளும் புதுக்கோட்டை மட்டுமில்லாமல் பக்கத்து மாவட்டங்களில் இருந்தும் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். முக கவசம் அணியாமல் இருந்தவர்களுக்கு நகராட்சி நிர்வாகம் சார்பில் முக கவசங்கள் வழங்கப்பட்டன. பல லட்சக்கணக்கான ரூபாய்க்கு வியாபாரம் நடைபெற்றிருக்கும் என கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்