உழவர் சந்தை முன்பு விவசாயிகள் தர்ணா
புதுக்கோட்டையில் உழவர் சந்தை முன்பு விவசாயிகள் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை
உழவர் சந்தை
புதுக்கோட்டை சந்தைபேட்டையில் உழவர் சந்தை உள்ளது. இதில் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் தாங்கள் விளைவித்த காய்கறிகளை இரு சக்கர வாகனம், பஸ்கள், சரக்கு ஆட்டோக்களில் கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர். பொதுமக்கள் பலரும் காய்கறிகளை வாங்கி வருகின்றனர். இந்தநிலையில் கொரோனா பரவலுக்குபின் உழவர் சந்தைக்குள் பொதுமக்களின் வாகனங்கள் அனுமதிக்கப்படுவதில்லை. இதனால் பொதுமக்கள் உழவர் சந்தைக்கு வெளிப்பகுதியில் தங்களது இரு சக்கர வாகனங்களை நிறுத்தி விட்டு செல்வது உண்டு. சிலர் வெளிப்பகுதியில் உள்ள கடைகளில் பொருட்கள் மற்றும் காய்கறிகளை வாங்கி செல்கிறார்கள்.
தர்ணா போராட்டம்
இந்தநிலையில் உழவர் சந்தைக்குள் பொதுமக்கள் வருகை குறைந்ததால், அதில் கடை வைத்து வியாபாரம் செய்யும் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பொதுமக்களின் வாகனங்களை உழவர் சந்தைக்குள் அனுமதிக்க கோரி நேற்று காலை உழவர் சந்தை முன்பு விவசாயிகள் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து தர்ணாவில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சமாதானமடைந்த பின் விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். அதன்பின் உழவர் சந்தையில் வியாபாரத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தினால் உழவர் சந்தை முன்பு நேற்று காலை சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.