திருமணத்திற்கு பெற்றோர் மாப்பிள்ளை பார்த்ததால் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை
திருமணத்திற்கு பெற்றோர் மாப்பிள்ளை பார்த்ததால் காதலனுடன் சென்ற இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
வாணியம்பாடி
வீட்டைவிட்டு வெளியேறினார்
திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாது மலையில் உள்ள ஜமுனாமரத்தூர் அடுத்த கோவிலூர் பகுதியை சேர்ந்தவர் துரைசாமி. இவரது மகள் தீபா (வயது 20). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த சுப்பிரமணி என்பவரது மகன் பாக்கியராஜ் (21) என்பவருக்கும் கடந்த 2 ஆண்டு காலமாக காதல் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் தீபாவிற்கு அவரது பெற்றோர் மாப்பிள்ளை பார்க்க ஏற்பாடு செய்துள்ளனர். இதனை அறிந்த காதல் ஜோடியினர் கடந்த 12-ந் தேதி வீட்டை விட்டு வெளியேறி தலைமறைவானார்கள்.
இதுகுறித்து ஜமுனாமுத்தூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை ஆலங்காயத்தில் உள்ள ஒரு தனியார் விடுதியில் அறை எடுத்து இருவரும் தங்கி உள்ளனர். நேற்று காலையில் பாக்கியராஜ் டிபன் வாங்கி வருவதற்காக சென்று உள்ளார். அப்போது அறையில் இருந்த தீபா தான் மறைத்து வைத்திருந்த பூச்சி மருந்தை எடுத்து குடித்துள்ளார்.
விஷம் குடித்து தற்கொலை
சிறிது நேரத்தில் பாக்கியராஜ் டிபன் வாங்கிக்கொண்டு அறைக்கு வந்துள்ளார். அப்போது தீபா அவர் மீது சரிந்து விழுந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பாக்கியராஜ், உடனடியாக தீபாவை, ஆலங்காயம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்தார். பின்னர் மேல்சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.
அங்கு சிறிது நேரத்தில் தீபா இறந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த தீபாவின் தந்தை துரைசாமி ஆலங்காயம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீபாவின் சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.