இந்த ஆண்டில் இயற்கை விவசாயம் செய்ய 1325 எக்டர் இலக்கு கலெக்டர் தகவல்
நீலகிரியில் இந்த ஆண்டில் இயற்கை விவசாயம் செய்வதற்கு 1,325 எக்டர் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாக கலெக்டர் கூறினார்.
ஊட்டி
நீலகிரியில் இந்த ஆண்டில் இயற்கை விவசாயம் செய்வதற்கு 1,325 எக்டர் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாக கலெக்டர் கூறினார்.
குறைதீர்க்கும் கூட்டம்
நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் ரத்து செய்யப்பட்டது. தற்போது தொற்று பரவல் குறைந்து உள்ளதால், ஆன்லைன் மூலம் குறைதீர்க்கும் கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.
அதன்படி நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் தோட்டக்கலை இணை இயக்குனர் சிவசுப்பிரமணியம், உதவி இயக்குனர் பெபிதா மற்றும் இதர துறைகளை சார்ந்த அரசு அலுவலர்கள், விவசாய சங்கங்களை சேர்ந்த பிரதிநிதிகள், விவசாயிகள் ஆன்லைன் மூலம் கலந்துகொண்டனர்.
1,325 எக்டேர் இலக்கு
விவசாயிகளிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கைகள் உரிய துறை அலுவலர்களுக்கு முன்னதாக அனுப்பப்பட்டு, தகுந்த விவரம் பெற்று கூட்டத்தில் 23 கோரிக்கைகள் விவாதிக்கப்பட்டு தீர்வு காணப்பட்டது.
கூட்டத்தில் கலெக்டர் இன்னசென்ட் திவ்யா பேசும்போது கூறியதாவது:-
நீலகிரி மாவட்டத்தில் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் 2021-22-ம் ஆண்டுக்கு தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டம் மூலம் 675 எக்டேரும், ஒருங்கிணைந்த தோட்டக்கலை வளர்ச்சி இயக்கம் மூலம் 650 எக்டேர் என 1,325 எக்டேர் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
இயற்கை விவசாயத்தில் ஈடுபடும் விவசாயிகளுக்கு அரசு மானியத்தில் முன்னுரிமை வழங்கப்படுகிறது.
மானியம்
துணைநிலை நீர் மேலாண்மை திட்டம் மூலம் நுண்ணீர் பாசன திட்டம் அமைத்து உள்ள விவசாயிகள் கிணறு, நீர் தொட்டி அமைக்க மற்றும் டீசல் என்ஜின் மோட்டாருக்கு பின்னேற்பு மானியம் வழங்கப்படும்.
அட்மா திட்டம் குறித்து பயிற்சி தகவல்களை விவசாயிகள் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர்களை அணுகி தெரிந்து கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.