பந்தலூரில் கொட்டித்தீர்த்த கனமழை

பந்தலூரில் மழை கொட்டித்தீர்த்தது. ஊட்டி அருகே சாலையில் மரம் முறிந்து விழுந்தது.

Update: 2021-07-16 17:31 GMT
ஊட்டி

பந்தலூரில் மழை கொட்டித்தீர்த்தது. ஊட்டி அருகே சாலையில் மரம் முறிந்து விழுந்தது. 

பரவலாக மழை 

நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து உள்ளது. ஊட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. ஊட்டி நகரில் வானம் மேகமூட்டத்துடன் இருந்ததோடு, மழை குறைவாக பெய்தது. 

பலத்த காற்று இல்லாததால் பாதிப்பு ஏற்படவில்லை. தொடர் மழையால் விளைநிலங்களை ஒட்டி உள்ள கால்வாய்களில் தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. ஊட்டி அருகே முத்தோரை பாலடாவில் சில்லஹல்லா கால்வாயில் தண்ணீர் அதிகமாக சென்றது. 

மரம் முறிந்து விழுந்தது 

ஊட்டி அருகே தொட்டபெட்டா-இடுஹட்டி சாலையில் மரம் முறிந்து விழுந்தது. இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப் பட்டது. இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சாலையில் விழுந்து கிடந்த மரத்தை வெட்டி அகற்றினார்கள்.

 பின்னர் அங்கு போக்குவரத்து சீரானது.  பந்தலூர் பகுதியில் விடிய விடிய கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் இங்குள்ள பொன்னானி ஆற்றில் வெள்ளம் பெருக் கெடுத்து ஓடுகிறது. பல இடங்களில் மின்கம்பிகள் மேல் மரங்கள் விழுந்ததால் மின்தடை ஏற்பட்டது. 


பாலம் இடிந்தது 

மேலும் நெலாக்கோட்டை அருகே விலங்கூரில் இருந்து குழிமூலா செல்லும் சாலையின் நடுவே உள்ள சிறு பாலம் இடிந்து விழுந்தது. அதுபோன்று பல வீடுகளின் அருகில் மண் சரிவும் ஏற்பட்டது. 

8 செ.மீ. மழை 

நீலகிரியில்  முடிவடைந்த மழையளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:- ஊட்டி-6.9, நடுவட்டம்-32, கிளன்மார்கன்-11.8, அவலாஞ்சி-62, எமரால்டு-14, அப்பர்பவானி-53, கூடலூர்-24, தேவாலா-40, செருமுள்ளி-20. 

பாடாந்தொரை-22, ஓவேலி-20, பந்தலூர்-86, சேரங்கோடு-88 உள்பட மொத்தம் 556.20 மழை பதிவாகி உள்ளது. இதன் சராசரி 19.18 ஆகும். அதிகபட்சமாக பந்தலூர், சேரங்கோடு ஆகிய பகுதிகளில் 8 சென்டி மீட்டர் மழை பெய்தது.

மேலும் செய்திகள்