பள்ளத்தூர் சாத்தப்ப செட்டியார் வீதியைச் சேர்ந்தவர் ஹரிஹரன் (வயது 24).இவர் பள்ளத்தூர் மெயின் ரோட்டில் பேக்கரி வைத்துள்ளார். இவரது பேக்கரியில் கும்பகோணம் அருகே உள்ள நாச்சியார்கோவிலை சேர்ந்த மாரிமுத்து (42) என்பவர் ஸ்வீட்ஸ் மாஸ்டராக வேலைக்கு சேர்ந்தார். வேலைக்கு சேர்ந்த 3 நாட்களிலேயே சம்பளம் போதவில்லை என்று கூறி சம்பளப் பணத்தை கணக்கீடு செய்து பெற்றுக் கொண்டு வேலையை விட்டு நின்று விட்டார். சம்பவத்தன்று பேக்கரி உரிமையாளர் ஹரிஹரன் காலையில் அடைக்கப்பட்டிருந்த தன் கடையில் உள்ள கண்காணிப்பு கேமராவின் பதிவுகளை தனது செல்போன் மூலம் பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது தனது கடையில் ஒருவர் இருப்பது தெரியவந்தது உடனடியாக பதிவுகளை பெரிதாக்கி ்பார்த்தபோது ஏற்கனவே வேலை பார்த்த ஸ்வீட்ஸ் மாஸ்டர் மாரிமுத்து கடையில் திருட முயற்சி செய்து கொண்டிருப்பது தெரியவந்தது. உடனடியாக பள்ளத்தூர் போலீசாருக்கு தகவல் கொடுத்து மாரிமுத்துவை கையும் களவுமாக பிடித்தனர். இது தொடர்பாக பள்ளத்தூர் போலீசார் வழக்குபதிவு செய்து மாரிமுத்துவை கைது செய்தனர்.