மலைபோல் குவிந்து கிடக்கும் மருத்துவ கழிவுகள்
முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனை வளாகத்தில் மலைபோல் குவிந்து கிடக்கும் மருத்துவ கழிவுகளால் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
விழுப்புரம்,
முண்டியம்பாக்கத்தில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனைக்கு தினந்தோறும் விழுப்புரம் மாவட்டம் மட்டுமின்றி பக்கத்து மாவட்டங்களான கள்ளக்குறிச்சி, கடலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட பல மாவட்டங்களில் இருந்தும் ஏழை, எளிய மக்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இந்நிலையில் மருத்துவமனையில் நோயாளிகளுக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட மருத்துவ கழிவுகள் ஊருக்கு அப்பால் கொட்டாமல் மருத்துவமனை வளாகத்திலேயே கொட்டப்பட்டு தீ வைத்து எரிக்கப்பட்டு வருகிறது.
நோய் தொற்று பரவும் அபாயம்
நோயாளிகள் சிகிச்சை பெறக்கூடிய மருத்துவ பிரிவுகளுக்கு பின்புறமே மருத்துவ கழிவுகளை திறந்தவெளியில் கொட்டி அதனை தீ வைத்து எரிப்பதால் மருத்துவமனையில் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு பலவித நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி மருத்துவ கழிவுகளை தீ வைத்து எரிக்கும்போது வெளியேறும் நச்சு புகை மற்றும் துர்நாற்றத்தினால் மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வரக்கூடிய நோயாளிகளும் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.
இவ்வாறு மருத்துவ கழிவுகள் மலைபோல் குவிந்து கிடப்பதோடு அந்த கழிவுகளை அகற்றாமல் இருப்பதாக ஏற்கனவே கடந்த சில வாரத்திற்கு முன்பு மாவட்ட கலெக்டர் டி.மோகனுக்கு புகார் சென்றதையடுத்து, அவர் மருத்துவமனை வளாகத்தில் ஆய்வு மேற்கொண்டு திறந்தவெளியில் மருத்துவ கழிவுகள் கொட்டப்படுவதை தவிர்க்க வேண்டும் எனவும், உடனடியாக அகற்ற வேண்டுமெனவும் உத்தரவிட்டார்.
கலெக்டர் நடவடிக்கை எடுப்பாரா?
ஆனால் மருத்துவமனை நிர்வாகத்தினர், அந்த கழிவுகளை அகற்றாமல் அதே இடத்திலேயே மீண்டும், மீண்டும் கொட்டி வருகின்றனர். இதனால் நாளுக்கு நாள் மருத்துவ கழிவுகள் மலைபோல் குவிந்து வருகிறது. இதில் மாவட்ட கலெக்டர், தனிக்கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.