தூத்துக்குடியில் உப்பு விலை குறைய தொடங்கியது
தூத்துக்குடி மாவட்டத்தில் உப்பு விலை குறைய தொடங்கியது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் உப்பு விலை குறைய தொடங்கி உள்ளது.
உப்பு உற்பத்தி
தூத்துக்குடியில் நடைபெறும் பிரதான தொழில்களில் உப்புத்தொழிலும் ஒன்றாகும். ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி முதல் ஆகஸ்டு மாதம் வரை உப்பு உற்பத்தி நடைபெறும். இந்த காலகட்டத்தில் விளைவிக்கப்படும் உப்பு சேமிக்கப்பட்டு ஆண்டு முழுவதற்கும் தேவையான இடங்களுக்கு விற்பனைக்காக அனுப்பப்படும்.
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் தற்போது வரை அவ்வப்போது பெய்து வரும் மழையின் காரணமாக இந்த ஆண்டு உப்பு உற்பத்தி பெருமளவு பாதிக்கப்பட்டது. இதனால் உப்பு விலை ரூ.3 ஆயிரத்து 500 வரை அதிகரித்தது.
விலை குறைவு
கடந்த ஆண்டு தூத்துக்குடி மாவட்டத்தில் 22 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யப்பட்டு இருந்தது. இந்தஆண்டு இதுவரை சுமார் 6 லட்சம் டன் உப்பு மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டு உள்ளது. இதனால் உப்பு விலை அதிகரித்து வந்தது. இந்தநிலையில் சமீபகாலமாக உப்பு உற்பத்திக்கு ஏற்ற சூழல் நிலவி வருவதால் உப்பு உற்பத்தி அதிகரித்து வருகிறது. இதனால் விலை சற்று குறைந்து உள்ளது. அதன்படி ஒரு டன் உப்பு ரூ.3 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டது.
இதுகுறித்து உப்பு உற்பத்தியாளர்கள் கூறுகையில், “ஜனவரி மாதம் முதல் ஆகஸ்டு மாதம் வரையில் உப்பு உற்பத்தி நடைபெறும். இந்த ஆண்டு அவ்வப்போது பெய்த மழையால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டது. தற்போது உப்பு உற்பத்தி அதிகரித்து வருவதால் விலை குறையத் தொடங்கி உள்ளது. ஆனாலும் இன்னும் ஒரு மாதம் மட்டுமே உப்பு உற்பத்திக்கு ஏற்றதாக இருக்கும். இதனால் வரும் காலங்களில் உப்பு பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனால் விலை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது” என்றனர்.