என்.எல்.சி. சுரங்க விரிவாக்க பணிக்காக வீடு, நிலம் கையகப்படுத்தும் முயற்சியை கைவிடக்கோரி கிராம மக்கள் போராட்டம்
என்.எல்.சி. சுரங்க விரிவாக்க பணிக்காக வீடு, நிலம் கையகப்படுத்தும் முயற்சியை கைவிடக்கோரி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.;
நெய்வேலி,
நெய்வேலியில் உள்ள என்.எல்.சி. இந்தியா நிறுவனம், சுரங்க விரிவாக்க பணிக்காக வானதிராயபுரம், தென் குத்து கிராமங்களில் உள்ள வீடு, நிலங்களை கையகப்படுத்தப்போவதாக அறிவித்திருந்தனர். இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் மந்தாரக்குப்பத்தில் உள்ள என்.எல்.சி. நில எடுப்பு அலுவலத்தில் தனி தாசில்தார் சிவக்குமார் தலைமையில் நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக வளையமாதேவி, கீழ்பாதி, மேல்பாதி, ஊ.ஆதனூர், வானதிராயபுரம் உள்ளிட்ட ஊராட்சி மன்ற தலைவர்களுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
போராட்டம்
இதுபற்றி தகவல் அறிந்த தென்குத்து கிராம மக்கள் விவசாய சங்க நிர்வாகிகள் ராமலிங்கம், வைரக்கண்ணு, ராகவன், கண்ணுசாமி, பெலிக்ஸ், கொளஞ்சி, ஸ்டாலின் ஆகியோருடன், வானதி ராயபுரம் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தங்களது கிராம நிலங்களை என்.எல்.சி. நிர்வாகம் கையகப்படுத்தும் முயற்சியை கைவிடக்கோரி கோஷம் எழுப்பினர். பின்னர் அவர்கள் இதுகுறித்து நாளைமறுநாள் (திங்கட்கிழமை) மாவட்ட கலெக்டரை சந்தித்து மனு கொடுக்கப்போவதாக கூறிவிட்டு சென்றனர்.
முத்தரப்பு கூட்டம்
இதற்கிடையே தனி தாசில்தார் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டம் குறித்து வானதிராயபுரம் ஊராட்சி மன்ற தலைவர் வைத்தியநாதன் வானதிராயபுரத்தில் உள்ள மாரியம்மன் கோயிலில் விளக்க கூட்டம் நடத்தினார். அப்போது அவர் பேசுகையில், என்.எல்.சி. நிர்வாகம் தனது சுரங்க பணிகளுக்காக ஏற்கனவே நிலம் மற்றும் வீடு கையகப்படுத்தியவர்களுக்கு நிரந்தர வேலை வழங்க வேண்டும் உரிய இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும்.
மேலும் வானதிராயபுரம் ஊராட்சிக்குட்பட்ட அனைத்து மக்களின் கருத்துகளை கேட்க மாவட்ட கலெக்டர், வானதிராயபுரம் ஊராட்சி பொதுமக்கள், என்.எல்.சி. அதிகாரிகளை கொண்டு முத்தரப்பு கூட்டம் கூட்ட வேண்டும். அதன் பின்னர்தான் நிலம் கையகப்படுத்தும் திட்டம் குறித்து முடிவு செய்ய வேண்டும் என தெரிவித்துவிட்டு வந்துள்ளதாகவும், நாம் அனைவரும் ஒன்றுகூடி என்.எல்.சி. நிர்வாகத்திற்கு வீடு, நிலம் வழங்குவதில்லை என்று ஏகமனதாக முடிவெடுத்து நமது கோரிக்கையை வென்றெடுக்க போராட வேண்டும் என்றார்.