தம்பதி உள்பட 6 பேருக்கு ஆயுள் தண்டனை
திருப்பூரில் தொழிலாளியை வெட்டிக்கொலை செய்த வழக்கில் தம்பதி உள்பட 6 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருப்பூர் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.
திருப்பூர்
திருப்பூரில் தொழிலாளியை வெட்டிக்கொலை செய்த வழக்கில் தம்பதி உள்பட 6 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருப்பூர் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.
தொழிலாளி வெட்டிக்கொலை
திருப்பூர் வெள்ளியங்காடு முத்தையன் லேஅவுட் பகுதியை சேர்ந்தவர் முருகேசன் வயது 38. இவர் திருப்பூரில் உள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் தையல் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவர் குடியிருக்கும் வீட்டுக்கு அருகே மதுரை உசிலம்பட்டியை சேர்ந்த மாணிக்கம் 35 என்பவர் குடும்பத்துடன் குடியிருந்து வந்தார். இவர் அந்த பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் டிரைவராக வேலை செய்து வந்தார்.
இந்தநிலையில் மாணிக்கத்தின் மனைவியிடம் முருகேசன் பழகியது தொடர்பாக அவர்களுக்கு முன்விரோதம் இருந்துள்ளது. இந்த நிலையில் கடந்த 29.6.2016 அன்று மாலை முருகேசன் தனது வீட்டில் இருந்தார். அப்போது மாணிக்கம், அவரது உறவினரான சத்யராஜ்34, நண்பர்களான கரட்டாங்காட்டை சேர்ந்த ரகுவரன்37, வெள்ளியங்காடு பகுதியை சேர்ந்த சுரேஷ்35, மாணிக்கத்தின் தந்தை பிச்சை65, தாயார் இந்திராணி 53 ஆகியோர் அரிவாள், கத்தி, மரக்கட்டை போன்ற ஆயுதங்களுடன் வீடு புகுந்து முருகேசனை சரமாரியாக வெட்டிக்கொலை செய்தனர்.
6 பேருக்கு ஆயுள் தண்டனை
இந்த கொலை தொடர்பாக திருப்பூர் தெற்கு போலீசார் மாணிக்கம், சத்யராஜ், ரகுவரன், சுரேஷ், பிச்சை, இந்திராணி ஆகிய 6 பேர் மீது கொலை மற்றும் வன்கொடுமை தடுப்பு சட்டப் பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். இதைத்தொடர்ந்து இவர்கள் மீதான வழக்கு விசாரணை திருப்பூர் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஸ்வர்ணம் நடராஜன் நேற்று தீர்ப்பு கூறினார்.
அந்த தீர்ப்பில், முருகேசனை கொலை செய்ததற்காக மாணிக்கம், சத்யராஜ், ரகுவரன், சுரேஷ், பிச்சை, இந்திராணி ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும், வீடு புகுந்து தாக்கிய குற்றத்திற்காக 1 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், கொடிய ஆயுதங்களை பயன்படுத்திய குற்றத்திற்காக 1 ஆண்டு கடுங்காவல் சிறைத்தண்டனையும், இவை அனைத்தையும் ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பு கூறினார். மேலும் தலா ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் சிறப்பு அரசு வக்கீல் ரூபன் ஆஜராகி வாதாடினார்.
----