கொலை வழக்கில் தொடர்புடைய 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது
திண்டுக்கல்லில் இருவேறு கொலை வழக்கில் தொடர்புடைய 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் அருகேயுள்ள சங்கணம்பட்டியை சேர்ந்த பெயிண்டர் கருப்பையா (வயது 32) கடந்த மாதம் படுகொலை செய்யப்பட்டார். இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து வடக்கு மாலைப்பட்டியை சேர்ந்த சிரஞ்சீவி (36) என்பவரை கைது செய்து தேனி சிறையில் அடைத்தனர்.
அதேபோல் சிறுமலை வேளாம்பண்ணை கிராமத்தை சேர்ந்த குப்புசாமி மகன் கணேசன் (38) கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் அதே பகுதியை சேர்ந்த கணேசன் (44) என்பவரை தாலுகா போலீசார் கைது செய்து தேனி சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில் சிரஞ்சீவி, கணேசன் ஆகியோரை குண்டர் சட்டத்தில் கைது செய்வதற்கு மாவட்ட கலெக்டருக்கு, போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியா பரிந்துரை செய்தார். இதையடுத்து கலெக்டர் விசாகன் உத்தரவின்பேரில் தேனி சிறையில் இருந்த 2 பேரும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.