ஹைவேவிஸ் மலைப்பகுதியில் தொடர் மழை: சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு
ஹைவேவிஸ் மலைப்பகுதியில் பெய்த தொடர்மழை காரணமாக சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
உத்தமபாளையம்:
ஹைவேவிஸ் மலைப்பகுதியில் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் சுருளி அருவிக்கு நீர்வரத்து அதிகரித்து நேற்று காலை முதல் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து வனத்துறையினர் மற்றும் போலீசார் சுருளி அருவி பகுதி மற்றும் அங்குள்ள ஆற்றங்கரையோர பகுதிகளில் பொதுமக்கள் சென்றுவிடாமல் இருக்க தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 வருடமாக சுருளி அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை அனுமதி அளிக்கவில்லை. தற்போது கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது. எனவே சுருளி அருவியில் தினமும் குறைந்த அளவாவது சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் வலியுறுத்தியுள்ளனர். இதனிடையே ஹைவேவிஸ் மலைப்பகுதியில் தொடர்மழை காரணமாக அங்கு கடந்த 14-ந்தேதி முதல் சுற்றுலாபயணிகள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.