தடுப்புச்சுவரில் மோதி டேங்கர் லாரி கவிழ்ந்ததால் சாலையில் கச்சா எண்ணெய் ஆறாக ஓடியது போக்குவரத்து பாதிப்பு

சென்னை அடையாறில் கச்சா எண்ணெய் ஏற்றி வந்த டேங்கர் லாரி தடுப்புச்சுவரில் மோதி கவிழ்ந்தது. இதனால் சாலையில் கச்சா எண்ணெய் ஆறாக ஓடியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2021-07-16 06:18 GMT
சென்னை, 

சென்னை மேடவாக்கத்தில் உள்ள ஒரு நிறுவனத்தில் இருந்து எண்ணூர் நோக்கி கச்சா எண்ணெய் டேங்கர் லாரி நேற்று முன்தினம் நள்ளிரவு 1 மணியளவில் அடையாறு வழியாக சென்று கொண்டிருந்தது.

அடையாறில் உள்ள நடிகர் சிவாஜி கணேசன் மணிமண்டபம் அருகே வந்தபோது திடீரென சாலை தடுப்புச்சுவரில் மோதிய லாரி கவிழ்ந்தது. இதனால் டேங்கரில் இருந்த கச்சா எண்ணெய் முழுவதும் சாலையில் கொட்டி ஆறாக பெருக்கெடுத்து ஓடியது.

இந்த விபத்து குறித்து தகவலறிந்ததும் அபிராமபுரம் போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

லாரியை ஓட்டி வந்த டிரைவர் ராம்லால் (வயது 42) குடிபோதையில் இருந்தார். அவரது தலையில் ரத்த காயம் ஏற்பட்டிருந்தது. அவர் எவ்வளவு மது அருந்தி இருந்தார்? என்பதை பரிசோதனை கருவி மூலம் கண்டறிய போலீசார் முற்பட்டனர். ஆனால் அதற்கு ராம்லால் உடன்படவில்லை. அவரை ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சையுடன், மது அளவு பரிசோதனையும் நடத்தப்பட்டது.

அதில் அவர் அளவுக்கு அதிகமாக குடித்திருந்தது தெரிய வந்தது. அவர், குடிபோதையில் தாறுமாறாக லாரியை ஓட்டி வந்ததால்தான், அவரது கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பில் மோதி லாரி கவிழ்ந்து இருப்பது தெரியவந்தது. சம்பவம் குறித்து அடையாறு போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவர் ராம்லாலை கைது செய்தனர். இவர் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் ஆவார்.

எப்போதும் பரபரப்பாக இருக்கும் அடையாறு பகுதியில் இந்த விபத்து நடந்ததால் அங்கு போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து காத்திருந்தன. பின்னர் தீயணைப்புத்துறையினர் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் இணைந்து சாலையில் கொட்டி கிடந்த கச்சா எண்ணெயை நீண்டநேரம் போராடி அகற்றினர்.

சாலையில் கவிழ்ந்து கிடந்த டேங்கர் லாரி, 2 ராட்சத கிரேன்கள் உதவியுடன் அப்புறப்படுத்தப்பட்டு சாலையோரம் நிறுத்தப்பட்டது. அதன்பின்னர் அப்பகுதியில் போக்குவரத்து இயல்புநிலைக்கு திரும்பியது.

மேலும் செய்திகள்