ரோந்து வாகனம் மோதி 3 பேர் காயம் ஆயுதப்படை போலீஸ்காரர் மீது வழக்குப்பதிவு

மெரினா காமராஜர் சாலையில் ரோந்து வாகனம் மோதி 3 பேர் காயம் ஆயுதப்படை போலீஸ்காரர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Update: 2021-07-16 05:34 GMT
சென்னை, 

பெருநகர சென்னை போலீசில் ஆயுதப்படை போலீஸ்காரராக பணியாற்றி வருபவர், கிருபாகரன் (வயது 27). திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த இவர், நேற்று சென்னை மெரினா காமராஜர் சாலையில் தலைமை செயலகம் செல்லும் வழியை நோக்கி ரோந்து வாகனத்தை ஓட்டி சென்றார். அண்ணா நூற்றாண்டு வளைவு அருகில் வரும்போது, கிருபாகரன் ஓட்டிச்சென்ற ரோந்து வாகனமும், 2 மோட்டார் சைக்கிள்களும் மோதி விபத்துக்குள்ளானது.

விபத்தில் காயம் அடைந்த திருவல்லிக்கேணி பகுதியை சேர்ந்த கூட்டுறவு உணவு பாதுகாப்பு துறையில் பணியாற்றும் சிகாமணி (56) என்பவரையும், மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த முன்னாள் அரசு வழக்கறிஞர் அருள்தாஸ் (56) மற்றும் அவருடைய மனைவி சுகந்தா மலர் (52) ஆகியோரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இந்த விபத்து குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், ரோந்து வாகனத்தை ஓட்டி வந்த போலீஸ்காரர் கிருபாகரன் வளைவில் திரும்பும் போது, வண்டியின் பக்கவாட்டு விளக்கை (இண்டிகேட்டர்) போடாமல், வாகனத்தை திருப்பியதால், அதை சற்றும் எதிர்பார்க்காத பின்னால் வந்த வாகன ஓட்டிகள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது தெரியவந்தது. இதையடுத்து விபத்தை ஏற்படுத்திய ஆயுதப்படை போலீஸ்காரர் கிருபாகரன் மீது அண்ணாசதுக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மேலும் செய்திகள்