படப்பை,
காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் அடுத்த கோவூர் தங்கம் அவென்யூ பகுதியை சேர்ந்தவர் சுந்தர்ராஜன். ஆட்டோ டிரைவர். இவருடைய மனைவி லட்சுமி (வயது 42). நேற்று சுந்தர்ராஜன் தனது மனைவி மற்றும் உறவினர்கள் 2 பேரை வண்டலூர் அருகே உள்ள உறவினர் வீட்டிற்கு ஆட்டோவில் அழைத்து சென்றார்.
வண்டலூர்-மீஞ்சூர் வெளிவட்ட சாலை சுங்கச்சாவடி அருகே செல்லும்போது முன்னால் சென்று கொண்டிருந்த லாரி திடீரென பிரேக் பிடித்ததால் பின்னால் சென்ற இவரது ஆட்டோ நிலைதடுமாறி லாரி மீது உரசி சாலையில் கவிழ்ந்தது.
இதில் லட்சுமி படுகாயம் அடைந்தார். மற்றவர்கள் லேசான காயம் அடைந்தனர். இதுகுறித்து அந்த பகுதியில் இருந்தவர்கள் சோமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு லட்சுமியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து காயம் அடைந்த நபர்கள் குரோம்பேட்டையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்று வருகின்றார். இந்த விபத்து குறித்து ஸ்ரீபெரும்புதூர் எடையார்பாக்கம் பகுதியை சேர்ந்த லாரி டிரைவர் சம்பந்தன் (42) என்பவரை பிடித்து சோமங்கலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.