ஈரோடு மாவட்ட வேளாண் துறை மூலம் திரவ உயிர் உரம் உற்பத்தி சோதனை ஓட்டம் தொடக்கம்
ஈரோடு மாவட்ட வேளாண் துறை மூலம், திரவ உயிர் உரம் உற்பத்தி சோதனை ஓட்டம் தொடங்கப்பட்டு உள்ளது.
ஈரோடு
ஈரோடு மாவட்ட வேளாண் துறை மூலம், திரவ உயிர் உரம் உற்பத்தி சோதனை ஓட்டம் தொடங்கப்பட்டு உள்ளது.
திரவ உயிர் உரம்
பவானி அரசு விதைப்பண்ணை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள திரவ உயிர் உர உற்பத்தி மையத்தினை மாவட்ட வேளாண் இணை இயக்குனர் சின்னசாமி தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர் இணை இயக்குனர் சின்னசாமி கூறியதாவது:-
வேளாண் துறை மூலம் இயற்கை விவசாயத்துக்கு பயன்படும் உயிர் உரங்கள், ஒட்டுண்ணிகள், நன்மை செய்யும் பூஞ்சாணங்கள், நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் போன்றவை பல்வேறு ஆய்வகங்கள் மூலம் உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றது. இதற்காக தமிழகத்தில் 15 திட உயிர் உர உற்பத்தி மையங்கள், 12 திரவ உர உற்பத்தி மையங்கள், 10 உயிரியல் காரணி ஆய்வகங்கள், இரு ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு மையங்கள், 41 ஒட்டுண்ணி உற்பத்தி ஆய்வகங்கள் செயல்படுகின்றன.
இதில் பவானி அரசு விதைப்பண்ணை வளாகத்தில், முதல் முறையாக திரவ உயிர் உர உற்பத்திக்கான சோதனை ஓட்டம் தொடங்கப்பட்டு உள்ளது. ஈரோடு மாவட்டத்துக்கு தேவையான திரவ வடிவ உயிர் உரங்கள் பிற மாவட்டங்களில் இருந்து பெறப்பட்டு வந்தது. தற்போது ஈரோடு மாவட்டத்திலேயே அசோஸ்பைரில்லம், ரைசோபியம் போன்ற நன்மை செய்யும் பாக்டீரியாக்களை கொண்டு திரவ உயிர் உரங்களை உற்பத்தி செய்ய உத்தரவிட்டு, சோதனை ஓட்டம் நடக்கிறது.
50 சதவீத மானியம்
சோதனை ஓட்டம் நிறைவடைந்த பிறகு ஆண்டுக்கு 50 ஆயிரம் லிட்டர் திரவ உயிர் உரங்கள் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இங்கு உற்பத்தியாகும் திரவ உரம், ஈரோடு மாவட்ட தேவையுடன், கோவை, திருவண்ணாமலை, நாமக்கல் மாவட்டத்துக்கும் அனுப்பப்படும். விவசாயிகளுக்கு தரமான திரவ உயிர் உரம் 50 சதவீத மானிய விலையில் வழங்கப்படும்.
இதன் மூலம் ரசாயன மருந்து, உரங்கள் பயன்படுத்துவது குறையும். திரவ உர உற்பத்தி ஆய்வகத்தில் முற்றிலும் தானியங்கி முறையில் இயங்கும் வகையில் ரூ.1 கோடியே 20 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின் போது வேளாண் உதவி இயக்குனர் தமிழ்செல்வன், வேளாண் அலுவலர் சத்தியராஜ் உள்பட பலர் உடன் இருந்தனர்.