நெல்லை கட்டிட காண்டிராக்டர் கொலையில் 4 வாலிபர்கள் கைது
நெல்லை கட்டிட காண்டிராக்டர் கொலையில் 4 வாலிபர்கள் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.
நெல்லை:
நெல்லை அருகே உள்ள வடக்கு தாழையூத்து கிராமத்தை சேர்ந்த நாராயணன் மகன் கண்ணன் (வயது 35). கட்டிட காண்டிராக்டர். இவர் கடந்த 12-ந் தேதி மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். அவரது உடலை ேபாலீசார் கைப்பற்றி பிரேத பரிேசாதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து தாழையூத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தனிப்படை அமைக்கப்பட்டு மர்ம நபர்களை தேடிவந்தனர். மேலும் கண்ணனின் உறவினர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அவரது உடலை வாங்க மறுத்து கடந்த 3 நாட்களாக போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் கண்ணன் கொலை தொடர்பாக நெல்லை அருகே உள்ள வாகைகுளம் கிராமத்தை சேர்ந்த பாண்டி மகன் நல்லதுரை (22), முத்துப்பட்டன் மகன் சங்கிலிபூதத்தான் (20), வேலாயுதம் மகன் குருசச்சின் (22), மேலப்பாளையம் நாராணம்மாள்புரத்தை சேர்ந்த முருகன் மகன் அம்மு என்ற அம்மு வெங்கடேஷ் (22) ஆகிய 4 பேரை போலீசார் நேற்று அதிரடியாக கைது செய்தனர்.
அவர்களிடம் நெல்லை ஊரக போலீஸ் துணை சூப்பிரண்டு அர்ச்சனா, தாழையூத்து இன்ஸ்பெக்டர் பத்மநாப பிள்ளை ஆகியோர் தீவிர விசாரணை நடத்தினர். இதில் பரபரப்பு தகவல் வெளியானது. அதாவது, வாகைக்குளத்தை சேர்ந்த முத்துமனோவை பாளையங்கோட்டை மத்திய சிறையில் வைத்து ஜேக்கப், அவரது கூட்டாளிகள் கொலை செய்தனர். இதற்கு பழிக்குப்பழியாக ஜேக்கப்பின் உறவினரான கண்ணனை வெட்டிக் கொலை செய்ததாக கைதானவர்கள் வாக்குமூலத்தில் கூறி இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
மேலும் இந்த கொலை தொடர்பாக சிலர் களக்காடு அருகே உள்ள சிங்கிகுளம்-பெத்தாணியாக பொத்தையடி மலைப்பகுதியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸ் சிறப்பு படையினர் நேற்று பொத்தையடி பகுதிக்கு சென்றனர்.
அங்கு மலையை சுற்றி வளைத்தனர். ஒருசில போலீஸ் அதிகாரிகள் மலையின் மேல் பகுதிக்கு சென்று தேடி பார்த்தனர். அதே நேரத்தில் டிரோன் கேமராவை பறக்க விட்டும் மலைப்பகுதி முழுவதும் யாரேனும் பதுங்கி இருக்கிறார்களா? என்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இதற்கிடையே வடக்கு தாழையூத்து கிராமத்தில் கண்ணனின் உறவினர்கள் 4-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். கண்ணன் உடலை ஒப்படைப்பது தொடர்பாக நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு நேரடி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இதற்காக கண்ணனின் மனைவி புனிதா மற்றும் குடும்பத்தினர் நெல்லை கலெக்டர் அலுவலகத்துக்கு வரவழைக்கப்பட்டனர். அவர்களுடன் நெல்லை தட்சணமாற நாடார் சங்க தலைவர் ஆர்.கே.காளிதாசன், செயலாளர் சண்முகவேல் உள்ளிட்டோரும் வந்தனர்.
அங்கு கலெக்டர் விஷ்ணு, நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி. பிரவின்குமார் அபிநபு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன், மாநகர போலீஸ் துணை கமிஷனர் (சட்டம்-ஒழுங்கு) சுரேஷ்குமார் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது கொலையாளிகள் அனைவரையும் உடனடியாக கைது செய்ய வேண்டும். புனிதாவுக்கு அரசு வேலை வழங்க வேண்டும். குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் நிவாரண தொகை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
இதுதொடர்பாக தமிழக அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் உறுதி அளித்தார். இதில் உடன்பாடு ஏற்பட்டதால் கண்ணன் உடலை பெற்றுக் கொள்ள அவருடைய குடும்பத்தினர் சம்மதம் தெரிவித்தனர்.
இதையடுத்து பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் உள்ள கண்ணனின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த சம்பவத்தையொட்டி ஐகிரவுண்டு, வடக்கு தாழையூத்து பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.