கர்நாடகத்தில் நன்னடத்தை அடிப்படையில் 139 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை - மந்திரிசபை கூட்டத்தில் முடிவு
கர்நாடகத்தில் நன்னடத்தை அடிப்படையில் 139 கைதிகளை விடுதலை செய்ய மந்திரிசபையில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
பெங்களூரு:
கோசாலைகள்
கர்நாடக மந்திரிசபை கூட்டம் முதல்-மந்திரி எடியூரப்பா தலைமையில் பெங்களூருவில் உள்ள விதானசவுதாவில் நேற்று நடைபெற்றது. இதில் மந்திரிகள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து சட்டம்-போலீஸ் மந்திரி பசவராஜ் பொம்மை நிருபர்களிடம் கூறியதாவது:-
கர்நாடகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் தலா ஒன்று வீதம் கோசாலைகளை திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு முதல்கட்டமாக ரூ.15 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். மேலும் நிதி தேவைப்பட்டால் அதை ஒதுக்கீடு செய்ய அரசு தயாராக உள்ளது. விவசாயத்துறையில் பயிர் அளவீடு செய்ய தேவையான ஏற்பாடு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒரு செல்போன் செயலி மூலம் பயிர் அளவீடு பணிகள் மேற்கொள்ளப்படும். விவசாயிகளே தங்களின் செல்போன் மூலம் இதை சர்வே செய்து தகவல்களை அனுப்பலாம். இதை பயன்படுத்த தெரியாதவர்கள் விவசாயத்துறை ஊழியரின் உதவியுடன் அளவீடு செய்யலாம். இதற்கு தேவையான உதவிகள் விவசாயிகளுக்கு வழங்கப்படும்.
உலக முதலீட்டாளர்கள் மாநாடு
இதற்கு ரூ.48 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். "கர்நாடகத்தில் முதலீடு செய்யுங்கள்" (இன்வெஸ்ட் கர்நாடகா) என்ற பெயரில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த மாநாடு அடுத்த ஆண்டு (2022) பிப்ரவரி மாதம் 9-ந் தேதி தொடங்கி 11-ந் தேதி வரை 3 நாட்கள் பெங்களூருவில் உள்ள அரண்மனை மைதானத்தில் நடைபெறும். கர்நாடகத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறையை சரிசெய்யும் நோக்கத்தில், ஆக்சிஜன் உற்பத்தி செய்ய முன்வரும் புதிய தொழில் நிறுவனங்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளன. அதாவது முதலீட்டு செலவில் 25 சதவீத மானியம் வழங்கப்படும். நிறுவனங்கள் குறைந்தபட்சமாக ரூ.10 கோடி முதலீடு செய்ய வேண்டும்.
ஆக்சிஜன் உற்பத்தியை தொடங்கி 3 ஆண்டுகள் வரை மின் கட்டண வரி விலக்கு வழங்கப்படும். அதன் பிறகும் மின் கட்டணத்தில் மானியம் வழங்கப்படும். அரசுக்கு வினியோகம் செய்யும் ஒரு டன் ஆக்சிஜனுக்கு ரூ.1,000 மானியம் வழங்கப்படும். 100 சதவீத முத்திரைத்தாள் கட்டண விலக்கு வழங்கப்படும். நில பரிவர்த்தனை கட்டணங்களுக்கும் விலக்கு அளிக்கப்படும். ராய்ச்சூர் மாவட்டம் தேவதுர்கா தாலுகாவில் என்ஜினீயரிங் கல்லூரி கட்டிடம் கட்ட ரூ.58 கோடி நிதி ஒதுக்கப்படும்.
139 கைதிகள் விடுதலை
போலீஸ் துறையில் ஆயுதப்படை பிரிவில் உள்ள காவலர்கள், போலீஸ் நிலையங்களுக்கு வரும்போது அவர்களின் உடல் தகுதி தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. 139 ஆயுள் தண்டனை கைதிகள் நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்ய முடிவு செய்துள்ளோம். இதுகுறித்து கவர்னருக்கு பரிந்துரை செய்கிறோம். வருவாய்த்துறையில் பொதுவாக பணி மூப்பு அடிப்படையில் பதவி உயர்வு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
பல்லாரி மாவட்டம் சிருகுப்பி நகருக்கு குடிநீர் வழங்கும் திட்டத்திற்கு ரூ.45.46 கோடி ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஹாவேரி மாவட்டம் ராணிபென்னூர் தாலுகா மெட்லேரி பகுதியில் 18 ஏரிகளை நிரப்ப ரூ.206 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது. கொப்பல் மாவட்டம் கங்காவதி தாலுகாவில் 5 ஏரிகளை நிரப்ப ரூ.93 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது. தட்சிண கன்னடா மாவட்டம் பெல்தங்கடியில் நேத்ராவதி ஆற்றின் குறுக்கே ரூ.66 கோடியில் பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.
சட்டசபை கூட்டத்தொடர் எப்போது?
மந்திரி பசவராஜ் பொம்மை கூறுகையில், "பெங்களூரு விதான சவுதா வளாகத்தில் பசவண்ணர் சிலை அமைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கர்நாடக சட்டசபையின் மழைக்கால கூட்டத்தொடரை நடத்துவது குறித்து பின்னர் முடிவு செய்யப்படும். மாநில அரசின் நிதிநிலை நன்றாக உள்ளது. கர்நாடகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மேலும் தளர்த்துவது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை.
மாவட்ட-தாலுகா பஞ்சாயத்துகளுக்கு வருகிற டிசம்பர் மாதம் தேர்தல் நடத்துவது இல்லை என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது. நடிகர் தர்ஷன் மீதான புகார் குறித்து விசாரணை நடத்தும்படி மைசூரு போலீஸ் கமிஷனருக்கு உத்தரவிட்டுள்ளேன். விசாரணை அறிக்கை வரட்டும்" என்றார்.