கடலில் படகு கவிழ்ந்து மீனவர் பலி
கூடங்குளம் அருகே கடலில் படகு கவிழ்ந்து மீனவர் பரிதாபமாக இறந்தார்.
கூடங்குளம்:
நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே உள்ள இடிந்தகரை மீனவர் கிராமம் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் ராயப்பன் (வயது 64). மீனவரான இவர் தனக்கு சொந்தமான படகில் தனது மகன் வில்லியம் மற்றும் ரவி ஆகியோருடன் மீன்பிடிக்க கடலுக்கு சென்றார். கடற்கரையில் இருந்து சுமார் ஒரு நாட்டிக்கல் தொலைவில் சென்றபோது ராட்சத அலையில் படகு சிக்கியது. இதில் படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில் படகில் இருந்த ராயப்பன், வில்லியம், ரவி ஆகியோர் கடலில் தத்தளித்துக் கொண்டு இருந்தனர்.
இதை பார்த்த கடலில் மற்ற படகுகளில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் விரைந்து சென்று உயிருக்கு போராடிக் கொண்டு இருந்த 3 பேரையும் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.
பின்னர் 3 பேரையும் இடிந்தரையில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், ராயப்பன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். மற்ற 2 பேரும் சிகிச்சை பெற்றனர்.
இதுகுறித்து கூடங்குளம் கடலோர காவல் படை சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும் கடலில் மூழ்கி பலியான ராயப்பன் உடலை பிரேத பரிசோதனைக்காக நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.