அடுத்த 5 ஆண்டுகளில் கர்நாடகத்தில் ஒரு கோடி பேருக்கு வேலைவாய்ப்பு - எடியூரப்பா அறிவிப்பு

கர்நாடகத்தில் அடுத்த 5 ஆண்டுகளில் ஒரு கோடி பேருக்கு வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று முதல்-மந்திரி எடியூரப்பா அறிவித்துள்ளார்.

Update: 2021-07-15 21:01 GMT
பெங்களூரு:

இளைஞர்களின் திறன்

  கர்நாடக அரசின் திறன் மேம்பாட்டுத்துறை சார்பில் உலக இளைஞர் திறன் நாள் விழா பெங்களூரு விதான சவுதாவில் நேற்று நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி எடியூரப்பா கலந்து கொண்டு அந்த விழாவை தொடங்கி வைத்து பேசியதாவது:-

  கர்நாடகத்தில் இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளித்தால் அதன் மூலம் திறன்மிக்க கர்நாடகத்தை உருவாக்க முடியும். ஒரு நாட்டின் வளர்ச்சி அதில் உள்ள இளைஞர்களின் திறனை அடிப்படையாக கொண்டு அமைகிறது. கர்நாடக அரசு இளைஞர்களின் திறனை மேம்படுத்த கடந்த 2 ஆண்டுகளில் பல்வேறு திட்டங்களை அமல்படுத்தியுள்ளது.

புலம் பெயர்ந்த தொழிலாளர்கள்

  கர்நாடகத்தில் 150 தொழிற்பயிற்சி நிறுவனங்களை ரூ.4,636 கோடியில் நவீனப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நவீன ஆய்வகங்கள், பயிற்சி கூடங்கள் அமைக்கப்படுகின்றன. இதற்காக பிரபல நிறுவனங்களுடன் அரசு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. இந்த பணிகள் விரைவாக முடிக்கப்பட்டு வருகிற செப்டம்பர் மாதம் நவீன ஆய்வகங்களின் பணி தொடங்கும்.

  கொரோனா பரவல் குறைந்துள்ளதை அடுத்து சொந்த ஊருக்கு சென்ற புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் மீண்டும் கர்நாடகம் வரத்தொடங்கியுள்ளனர். அவர்களுக்கு உரிய தொழிற்பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக ஒரு இணையதள பக்கம் தொடங்கப்பட்டுள்ளது. மேலும் டிஜிட்டல் மூலம் வேலை வாய்ப்பு மேளா நடத்தப்படும்.

நவீன உபகரணங்கள்

  முறையாக தொழிற் பயிற்சி பெற்றவர்கள் குறித்த விவரங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளுக்கு தேவையான திறன்மிகு மனித வளத்தை ஏற்படுத்தி கொடுக்கும் வகையில் சர்வதேச புலம்பெயர் மையம் ஒன்றை அரசு தொடங்கியுள்ளது. ஏற்கனவே இங்கிலாந்து அரசுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு அந்த நாட்டிற்கு தேவையான டாக்டர்கள் மற்றும் செவிலியர்களை அனுப்பும் நடவடிக்கையை எடுத்துள்ளது.

  இளைஞர்களுக்கு உயர்மட்ட தொழில்நுட்ப திறன் பயிற்சி வழங்கி அத்தகைய திறன் வாய்ந்த இளைஞர்களை கர்நாடகத்தில் உள்ள சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இத்தகைய தொழில்நுட்ப திறன் பயிற்சி வழங்க நவீன உபகரணங்களுடன் 4 டிப்ளமோ கல்லூரிகளை திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

மகளிர் சுயஉதவி குழுக்கள்

  கிராமப்புற பொருளாதாரத்தை உயர்த்தும் நோக்கத்தில் கிராமங்களில் செயல்படும் மகளிர் சுயஉதவி குழுக்களின் கூட்டமைப்புகளுக்கு சுழல் நிதியாக ரூ.400 கோடி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதில் தற்போது 17 ஆயிரத்து 121 மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.149 கோடி சுழல் நிதி விடுவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு (2020) தேசியநகர வாழ்வாதார திட்டத்தின் கீழ் கர்நாடகத்தில் 1.10 லட்சம் தெருவோர வியாபாரிகளுக்கு தலா ரூ.10 ஆயிரம் முதலீட்டு கடன் வழங்கப்பட்டது.

  இந்த கடன் தொகையை நடப்பு ஆண்டில் ரூ.20 ஆயிரமாக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் அடுத்த 5 ஆண்டுகளில் ஒரு கோடி வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும். இதற்காக கர்நாடக திறன் செயல்படை அமைக்கப்பட்டுள்ளது. கர்நாடக அரசு இளைஞர்களின் திறனை மேம்படுத்த பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. திறன் இந்தியா மிஷன் மற்றும் தற்சார்பு திட்டங்கள் மூலம் இளைஞர்களின் திறனை மேம்படுத்துவதில் முக்கிய பங்காற்றும்.
  இவ்வாறு எடியூரப்பா பேசினார்.
  நிகழ்ச்சியில் துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்