நடிகர் தர்ஷன் மீதான புகார் குறித்து விசாரணைக்கு உத்தரவு - மந்திரி பசவராஜ் பொம்மை பேட்டி

ஓட்டல் ஊழியரை தாக்கியதாக நடிகர் தர்ஷன் மீதான புகார் குறித்து விசாரணை நடத்தும்படி மைசூரு போலீஸ் கமிஷனருக்கு உத்தரவிட்டுள்ளதாக மந்திரி பசவராஜ் பொம்மை கூறினார்.;

Update: 2021-07-15 20:58 GMT
பெங்களூரு:

  கர்நாடக சட்டம்-போலீஸ் துறை மந்திரி பசவராஜ் பொம்மை பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

கமிஷனருக்கு உத்தரவு

  நடிகர் தர்ஷன், மைசூரு ஓட்டல் ஊழியரை தாக்கியதாக கூறி கன்னட திரைப்பட இயக்குனர் இந்திரஜித் லங்கேஷ் என்னிடம் புகார் கடிதம் ஒன்றை கொடுத்துள்ளார்.

  அவர் என்ன கூறியுள்ளார் என்பது எனக்கு முழு விவரங்கள் தெரியாது. அவர் வழங்கிய புகார் அடிப்படையில் விசாரணை நடத்தும்படி மைசூரு மாநகர போலீஸ் கமிஷனருக்கு உத்தரவிட்டுள்ளேன். அவர் எந்த ஆதாரங்களையும் வழங்கவில்லை.
  இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.

ஓட்டல் ஊழியர் மீது தாக்குதல்

  மந்திரியிடம் இந்திரஜித் லங்கேஷ் வழங்கிய புகாரில் கூறியிருப்பதாவது:-

  "மைசூருவில் உள்ள சந்தேஷ் பிரின்ஸ் ஓட்டலில் தலித் சமூகத்தை சேர்ந்த ஊழியர் ஒருவரை நடிகர் தர்ஷன் தாக்கியுள்ளார். இதில் அவரது கண்கள் பாதிக்கப்பட்டன.
  இந்த சம்பவத்தின்போது தர்ஷனுடன் ராகேஷ், ஹர்ஷா, பவித்ரகவுடா ஆகியோர் இருந்து உள்ளனர். இந்த சம்பவம் நடந்த பிறகு சமரச பேச்சுவார்த்தை நடத்தி ரூ.50 ஆயிரம் பணத்தை தாக்கப்பட்ட ஊழியருக்கு கொடுத்துள்ளனர்.

காட்சிகள் அழிப்பு

  இந்த சம்பவம் வெளியே தெரியக்கூடாது என்பதற்காக அங்கு இருக்கும் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் அழிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து மைசூரு போலீசார் விசாரணை நடத்த வேண்டும். நான் புகார் கொடுத்துள்ளேன். இதுகுறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும்.
  இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்