நந்தி மலைக்கு ரோப்கார் வசதி - மந்திரி சி.பி.யோகேஷ்வர் தகவல்

பெங்களூரு அருகே உள்ள நந்திமலைக்கு ரோப்கார் வசதி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை மந்திரி சி.பி.யோகேஷ்வர் கூறினார்.

Update: 2021-07-15 20:48 GMT
பெங்களூரு:

ரோப்கார் வசதி

  கர்நாடக சுற்றுலா, சுற்றுச்சூழல் துறை மந்திரி சி.பி.யோகேஷ்வர் தலைமையில் சுற்றுலாத்துறை வளர்ச்சி பணிகள் ஆலோசனை கூட்டம் பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இதில் சுற்றுலாத்துறை செயலாளர் பங்கஜ்குமார் பாண்டே, இயக்குனர் சிந்து ரூபேஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் சி.பி.யோகேஷ்வர் பேசியதாவது:-

  பெங்களூரு அருகே உள்ள நந்தி மலை மிக முக்கியமான சுற்றுலா தலமாக உள்ளது. அந்த தலத்திற்கு ரோப்கார் வசதி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பணிகளை விரைவாக தொடங்க வேண்டும். வருகிற 23-ந் தேதி அந்த இடம் நேரில் ஆய்வு செய்யப்படும். அதன் பிறகு டெண்டர்கள் பணிகள் தொடங்கப்படும். இதற்கு தேவையான ஏற்பாடுகளை அதிகாரிகள் செய்ய வேண்டும்.

தேவையான ஏற்பாடுகள்

  ஆர்கான் இன்ப்ரா என்ற நிறுவனத்திற்கு ரோப்கார் அமைப்பதில் அதிக அனுபவம் உள்ளது. நமது நாட்டில் 64 இடங்களில் அந்த நிறுவனம் ரோப்கார் அமைத்து கொடுத்துள்ளது. வெளிநாடுகளிலும் ரோப்கார் அமைத்த அனுபவம் அந்த நிறுவனத்திற்கு உள்ளது. கர்நாடகத்தில் முதல் முறையாக ரோப்கார் அமைக்கப்படுகிறது. இதற்கு தேவையான ஏற்பாடுகளை அதிகாரிகள் விரைவாக செய்ய வேண்டும்.

  பாகுபலி குமடேஸ்வரா கோவிலை காண வரும் பக்தர்கள் அதற்கு முன்பாக அதன் வரலாற்றை அறிந்து கொள்ள வசதியாக ஒரு சிறிய அரங்கம் அமைக்கப்படும். அதில் அந்த கோவிலின் வரலாறு குறித்த குறும்படம் திரையிட்டு காண்பிக்கப்படும். பக்தர்கள் அந்த படத்தை பார்த்துவிட்டு கோவிலுக்கு செல்லும் வகையில் ஏற்பாடுகள் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இத்தகைய வசதி ஒடிசாவில் உள்ள ஒரு கோவிலில் செய்யப்பட்டுள்ளது.

சுற்றுலா தலங்கள்

  கர்நாடகத்தில் சுற்றுலா தலங்களின் பரப்பை அதிகரிக்க வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. அதனால் சுற்றுலா தலங்களை மேம்படுத்தி பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த சுற்றலா பயணிகளை இங்கு வரவைக்க வேண்டும். சர்வதேச சுற்றுலா மேளாவை ஏற்பாடு செய்து அதன் மூலம் சுற்றுலாத்துறையில் அதிக முதலீடுகளை ஈர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  இவ்வாறு சி.பி.யோகேஷ்வர் கூறினார்.

மேலும் செய்திகள்