ஏற்காட்டில் 33 மி.மீ. மழை பதிவு

ஏற்காட்டில் அதிகபட்சமாக 33 மி.மீ. மழை பதிவாகி இருந்தது.

Update: 2021-07-15 19:46 GMT
சேலம்,

சேலம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நேற்று முன்தினம் மதியம் முதல் இரவு வரை பலத்த மழை பெய்தது. இதைத்தொடர்ந்து நேற்று 2-வது நாளாக அதிகாலையிலேயே மழை பெய்யத்தொடங்கியது. மதியம் 2 மணி வரை மழை பெய்து கொண்டே இருந்தது. 

பின்னர் சிறிது நேரம் விட்டு விட்டு இரவு வரை மழை தூறல் விழுந்து கொண்டே இருந்தது. மேலும் வானம் மேகமூட்டாக காணப்பட்டது. அவ்வப்போது குளிர்காற்றும் வீசியது. கடந்த 2 நாட்களாக தொடர்ந்து மழை பெய்ததால் பல இடங்களில் மழைநீர் தேங்கி நின்றது. இதனால் சாலை சேறும் சகதியுமாக காணப்பட்டது.

காலையில் மழை பெய்து கொண்டிருந்ததால் அரசு அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அலுவலங்களுக்கு வேலைக்கு சென்றவர்கள் குடைபிடித்தபடி சென்றனர். தாழ்வான இடங்களில் சாக்கடை நீருடன் மழை நீர் கலந்து ஓடியது. பல இடங்களில் சாலைகளில் மழை நீர் தேங்கி நின்றதால் மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களில் சென்றவர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளானார்கள். 
மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நேற்று 2-வது நாளாக மழை பெய்தது. இதே போன்று ஏற்காட்டில் நேற்று முன்தினம் மாலை 3 மணி முதல் பலத்த மழை பெய்தது. இதனால் பல இடங்களில் மின் தடை ஏற்பட்டது. அங்கு நேற்று காலையிலும் மழை நீடித்தது. மேலும் சேலம்-ஏற்காடு மலைப்பாைதயில் கடும் மேக மூட்டம் சூழ்ந்தன. இதனால் வாகனங்கள் முகப்பு விளக்கு வெளிச்சத்தில் இயக்கப்பட்டன.

ஏற்காட்டில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி அதிகபட்சமாக 33 மி.மீ. மழை பதிவாகி இருந்தது. மாவட்டத்தில் மற்ற இடங்களில் பதிவான மழையின் அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

ஓமலூர்-27.4, சேலம்-23.7, வாழப்பாடி-22, கரியகோவில்-20, தம்மம்பட்டி-17, ஆனைமடுவு-15, கெங்கவல்லி-13, ஆத்தூர்-10, பெத்தநாயக்கன்பாளையம்-10, வீரகனூர்-9, காடையாம்பட்டி-8.3, மேட்டூர்-5.4, எடப்பாடி-4.

மேலும் செய்திகள்