ஏரியில் மூழ்கி வாலிபர் பலி
ஏரியில் குளிக்க சென்ற வாலிபர், தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.
ஜெயங்கொண்டம்:
தொழிலாளி
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள குவாகம் கிராமத்தை சேர்ந்தவர் கணேசன். இவருடைய மனைவி பாப்பாத்தி. இந்த தம்பதிக்கு 3 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இதில் மூன்றாவது மகனான ரமேஷ்(வயது 27), இலையூர் கிராமத்தில் உள்ள இனிப்பு(சுவீட்) கடை ஒன்றில் பலகாரம் செய்யும் மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். இவர் வேலை முடிந்த பின் வழக்கமாக இலையூர் பகுதியில் உள்ள வண்ணான் ஏரியில் குளித்துவிட்டு செல்வது வழக்கம். அதேபோல் நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்தபின்னர், ஏரியில் குளிப்பதற்காக கடை உரிமையாளர் கருப்பையாவின் மொபட்டில் சென்றுள்ளார். அங்கு கரையோரம் மொபட்டை நிறுத்திவிட்டு படித்துறையில் ஆடைகளை வைத்துவிட்டு ஏரியில் இறங்கி குளித்துள்ளார். அப்போது அவர் தண்ணீரில் மூழ்கியதாக தெரிகிறது.
தேடினர்
இந்நிலையில் ஏரிக்கு குளிக்க சென்றவர், நீண்ட நேரமாகியும் கடைக்கு திரும்பாததால் சந்தேகமடைந்த கருப்பையா, ரமேசின் குடும்பத்தினரை தொடர்பு கொண்டு அவர் வீட்டிற்கு வந்தாரா? என்று விசாரித்துள்ளார். அவர் வரவில்லை என்று ரமேசின் பெற்றோர் தெரிவித்துள்ளனர். இதையடுத்து கருப்பையா உள்ளிட்டோர் ரமேசை ேதடினர். ஆனால் அவர் கிடைக்கவில்லை.
இந்நிலையில் நேற்று காலை வண்ணான் ஏரியில் குளிக்க சென்றவர்கள், அங்கு நிறுத்தப்பட்டிருந்த மொபட்டை கண்டு கருப்பையாவுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அவர் ஏரிக்கு வந்து பார்த்தபோது ரமேசின் சட்டை, கைலி, செருப்பு உள்ளிட்டவையும் அங்கு இருந்தன. இது பற்றி ஜெயங்கொண்டம் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
பிணமாக மீட்பு
அதன்பேரில் அங்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார், ஏரியில் ரமேசை தேடும் பணியில் ஈடுபட்டனர். ரப்பர் படகு மூலம் சென்று நீண்ட நேரமாக அவர்கள் ஏரியில் தீவிரமாக தேடியும் ரமேஷ் கிடைக்கவில்லை. மேலும் அப்பகுதியில் பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் நேற்று மாலை ஏரியின் நடுவே தண்ணீரில் ரமேசின் உடல் மிதந்தது. இதையடுத்து அவருடைய பிணத்தை தீயணைப்பு வீரர்கள் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். போலீசார், ரமேசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.