நண்பர்களுடன் குளிக்கச்சென்ற எலக்ட்ரீசியன் நீரில் மூழ்கி சாவு
நண்பர்களுடன் குளிக்கச்சென்ற எலக்ட்ரீசியன் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.
வேப்பந்தட்டை:
பெரம்பலூர் மாவட்டம் நக்கசேலம் கிராமத்தை சேர்ந்தவர் முனியசாமி. இவருடைய மகன் அகிலன் (வயது 22). இவர் எலக்ட்ரீசியனாக பணியாற்றி வந்தார். இந்நிலையில் நேற்று தனது நண்பர்களான நக்கசேலத்தைச் சேர்ந்த முத்துமணி, விளாமுத்தூரை சேர்ந்த மோகன், சிறுவாச்சூரை சேர்ந்த மாரிமுத்து ஆகியோருடன் வேப்பந்தட்டை அருகே உள்ள விசுவக்குடி அணையில் குளிப்பதற்காக சென்றார். அணையில் குளித்தபோது அகிலன் ஆழமான பகுதிக்கு சென்றதாக தெரிகிறது. நீச்சல் தெரியாததால் அவர் திடீரென நீரில் மூழ்கினார். இது பற்றி தகவல் அறிந்த பெரம்பலூர் தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து தண்ணீரில் இறங்கி, அகிலனை மீட்டு வெளியே கொண்டு வந்து பார்த்தபோது அவர் உயிரிழந்திருந்தது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக அரும்பாவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அகிலனின் உடலை கைப்பற்றி பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.