மர்ம விலங்கு கடித்து 2 நாய்கள், 12 கோழிகள் சாவு
ஆரல்வாய்மொழியில் மர்ம விலங்கு கடித்து 2 நாய்கள், 12 கோழிகள் இறந்தன.
ஆரல்வாய்மொழி:
ஆரல்வாய்மொழியில் மர்ம விலங்கு கடித்து 2 நாய்கள், 12 கோழிகள் இறந்தன.
நாய்கள், கோழிகள் சாவு
ஆரல்வாய்மொழி மிஷன் காம்பவுண்டு கோவில் தெருவை சேர்ந்தவர் மனுவேல் (வயது 53). இவருக்கு சொந்தமான 1 நாய், 3 கோழிகள் அதே பகுதியில் இறந்து கிடந்தன. இதனை பார்த்த மனுவேல் அதிர்ச்சி அடைந்தார். மேலும் அதே பகுதியை சேர்ந்த ராஜதுரைக்கு சொந்தமான 1 நாய், 9 கோழிகளும் ரத்த காயங்களுடன் இறந்து கிடந்தன.
ஒரே தெருவில் அடுத்தடுத்து இந்த சம்பவம் நடந்ததால், அந்த பகுதியில் பொதுமக்கள் அச்சத்தில் உறைந்தனர். காட்டில் இருந்து வந்த மர்ம விலங்கு, நாய்கள்,கோழிகளை கடித்திருக்கலாம் என அஞ்சினர்.
மர்ம விலங்கு கடித்தது
மேலும் இதுபற்றி தகவல் அறிந்த பூதப்பாண்டி வனவர் ரமேஷ், வன காப்பாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, ஆல்வின், வேட்டை தடுப்பு காவலர் சிவா ஆகியோர் விரைந்து வந்து இறந்து கிடந்த கோழிகள், நாய்களை பார்வையிட்டனர்.பின்னர் அவர்கள் கூறுகையில், ஏதோ மர்ம விலங்கு நாய்களையும், கோழிகளையும் கடித்து கொன்றுள்ளது. கடித்த விலங்கு சிறுத்தையாக இருந்திருந்தால் நாய்களை கொன்று அதே இடத்தில் விட்டு சென்றிருக்காது.
பொதுமக்கள் பீதி
எனினும் அந்த மர்ம விலங்கை தேடி வருகிறோம். பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் என்றனர். மர்ம விலங்கு கடித்து நாய்கள், கோழிகள் இறந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பொதுமக்கள் பீதியுடன் உள்ள னர். மர்ம விலங்கு மீண்டும் ஊருக்குள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. எனவே அந்த மர்மவிலங்கை பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.