கம்பி வேலியில் சிக்கி தவித்த சிறுத்தை சாவு
ஊட்டி அருகே 4 மணி நேரம் கம்பி வேலியில் சிக்கி தவித்த சிறுத்தை இறந்தது. இதுகுறித்து 2 பேரிடம் வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஊட்டி
ஊட்டி அருகே 4 மணி நேரம் கம்பி வேலியில் சிக்கி தவித்த சிறுத்தை இறந்தது. இதுகுறித்து 2 பேரிடம் வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலியில் சிக்கிய சிறுத்தை
நீலகிரி வன கோட்டம் கட்டபெட்டு வனசரகத்துக்கு உட்பட்ட எல்லநள்ளி ஜோதிநகரில் விளைநிலத்தையொட்டி அமைக்கப்பட்ட கம்பி வேலியில் சிறுத்தை ஒன்று சிக்கி இருப்பதாக நேற்று வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து நீலகிரி வனக்கோட்ட அலுவலர் குருசாமி, உதவி வன பாதுகாவலர் சரவணன் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர்.
பயிரிடாத நிலத்தை சுற்றி அமைக்கப்பட்ட கம்பி வேலியில் சிறுத்தையின் உடல் சிக்கி இருந்ததும், அதனால் வெளியே வர முடியாமல் போராடியதும் தெரியவந்தது. இதையடுத்து சிறுத்தையை பாதுகாப்பாக உயிருடன் மீட்க நைலான் வலைகள் மூலம் வனத்துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
பரிதாபமாக இறந்தது
சிறுத்தையின் இடுப்பு பகுதியை சுற்றி இருந்த வேலி கம்பி வெட்டப்பட்டு, சிறுத்தை வேலியில் இருந்து விடுவிக்கப்பட்டது. அதன் பின்னர் சிறுத்தை நடக்க முடியாமல் ஒரே இடத்தில் நின்றது.
அதன் பின்னங்காலில் காயம் ஏற்பட்டு இருக்கலாம் என கால்நடை டாக்டர்கள் ஆய்வு செய்து பரிசோதித்தனர். அப்போது சிறுத்தை அசைவு இல்லாமல் இருந்தது.பின்னர் சிறிது நேரத்தில் சிறுத்தை இறந்து விட்டது உறுதி செய்யப்பட்டது. இதனால் வனத்துறையினரின் 4 மணி நேர போராட்டம் வீணானது.
2 பேரிடம் விசாரணை
இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, வேலியில் சிக்கி இறந்த ஆண் சிறுத்தைக்கு 2 வயது இருக்கும். கம்பி வேலியில் சிக்கி அதன் முதுகெலும்பு மற்றும் நரம்பு சேதம் ஏற்பட்டதன் காரணமாக இறந்து இருக்கலாம். கால்நடை டாக்டர்கள் மூலம் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. வன பாதுகாப்பு சட்டத்தின்படி வனவிலங்குகளை வேட்டையாடுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவத்தில் தோட்ட உரிமையாளர் மற்றும் குத்தகைக்கு எடுத்து நடத்துபவர் ஆகிய 2 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சுருக்கு கம்பியில் சிக்கி சிறுத்தை இறந்ததா என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது என்றனர்.