சிதம்பரம் நடராஜர் கோவிவில் ஆனித்திருமஞ்சன தரிசன விழா

சிதம்பரம் நடராஜர் கோவிவில் ஆனித்திருமஞ்சன தரிசன விழா நேற்று பக்தர்கள் இன்றி நடந்தது.

Update: 2021-07-15 17:04 GMT
சிதம்பரம், 

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள உலக புகழ்பெற்ற நடராஜர் கோவிலில் ஆனித்திருமஞ்சன விழா கடந்த 6-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. கொரோனா பெருந்தொற்று கட்டுப்பாடு காரணமாக பக்தர்கள் இன்றி கோவில் உட்பிரகாரத்திலேயே விழா நடைபெற்று வருகிறது. மேலும் விழாவுக்கான பூஜைகள் முடிந்த பின்னர் குறிப்பிட்ட நேரங்களில் மட்டும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக தேரோட்டம் நடத்த மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது. அதற்கு பதிலாக கோவில் உட்பிரகாரத்திலேயே பக்தர்கள் இன்றி தேரோட்டம் மற்றும் ஆனித்திருமஞ்சன விழா தரிசனத்தை நடத்தலாம் என்றும் அறிவுறுத்தியது. 

தாிசன நிகழ்ச்சி

அதன்படி நேற்று முன்தினம் 5 மணியளவில் நடராஜர் மற்றும் சிவகாமசுந்தரி அம்பாள், கோவில் உட்பிரகாரத்திலேயே வலம் வந்து, ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளினர். பின்னர் காலை 9 மணி முதல் மதியம் 2 வரை மட்டுமே பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். அதன் பின்னர் நடை அடைக்கப்பட்டது. 

விழாவின் சிகர நிகழ்ச்சியான தரிசன நிகழ்ச்சி நேற்று பக்தர்கள் இன்றி நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை 5 மணி முதல் ஆயிரங்கால் மண்டபத்தில் நடராஜருக்கும், சிவகாம சுந்தரிக்கும் மகா அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. பின்னர் மாலை 5 மணியளவில் ஆயிரங்கால் மண்டபத்தில் இருந்து சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய நடராஜ பெருமான், சிவகாம சுந்தரி முன்னும் பின்னும் ஆனந்த நடனம் ஆடிய படியே சித்சபைக்கு சென்றனர். தரிசன விழாவை காண்பதற்கு பக்தர்களுக்கு அனுமதி இல்லாததால் கோவில் வளாகம் வெறிச்சோடி காணப்பட்டது. 

பக்தர்களுக்கு அனுமதி

இதற்கிடையே நடராஜரை தரிசனம் செய்வதற்காக மதியம் முதலே பக்தர்கள் வரிசையில் காத்திருந்தனர். இதைத்தொடர்ந்து மாலை 5.45 மணியளவில் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக அனுமதிக்கப்பட்டனர். இரவு 11 மணி வரை பக்தர்கள் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். 
இதற்கான ஏற்பாடுகளை கோவில் பொது தீட்சிதர்கள் செய்திருந்தனர். மேலும் பாதுகாப்பு பணியில் சிதம்பரம் துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ் ராஜ் தலைமையில் ஏராளமான போலீசார் ஈடுபட்டிருந்தனர். 
---

மேலும் செய்திகள்